search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைர விழா கொண்டாட்டம்: கருணாநிதிக்கு நமச்சிவாயம் வாழ்த்து
    X

    வைர விழா கொண்டாட்டம்: கருணாநிதிக்கு நமச்சிவாயம் வாழ்த்து

    வைர விழா காணும் வாழும் முத்தமிழ் அறிஞர், தூய உள்ளம் படைத்த தூய்மையான தலைவர். டாக்டர் கலைஞர் பல்லாண்டு காலம் வாழ்ந்து தமிழினத்திற்கு பெருமை சேர்க்க இறைவனை வேண்டுகிறேன் என நமச்சிவாயம் கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தமிழினம் நமக்கு தந்த தனிப்பெரும் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 75 ஆண்டுகள் அரசியலில் தடம் பதித்ததை கொண்டாடும் வகையில் நடைபெற இருக்கின்ற வரலாற்று சிறப்பு மிக்க வைர விழா பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்ட கூடிய உன்னத விழாவாக திகழும் என்பது ஐயமில்லை.

    இளமை பருவத்திலேயே பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்து கொண்டு தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்து கொண்டிருப்பவர் தன்மானமிக்க தமிழர். சீர்மிகு தமிழ் மொழியை செம் மொழியாக்கிய செயற்கரிய தலைவர். கலைதுறை, திரைத்துறை, இலக்கியம், அரசியல் போன்றவற்றில் தனக்கென தனி முத்திரை பதித்த பன்முகத்தன்மை படைத்த ஒப்பற்ற தலைவர் டாக்டர் கலைஞர்.

    அரசியலின் பல்கலைக் கழகமாக திகழ்ந்து, இன்றும் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக விளங்குபவர். இந்திய அரசியலை தீர்மானிக்கூடிய அசாத்திய திறமை படைத்த ஆற்றல் மிக்க தலைவர். பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்து கொண்ட நாள் முதல் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் களைப்பறியாமல் தொண்டாற்றும் கோமகன் டாக்டர் கலைஞர்.

    தமிழகம் மட்டுமல்லாது, புதுவையிலும் தனது அரசியல் சாதுரியத்தால், பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி காட்டியவர். புதுவை மாநிலம் தான் என் உயிரை காத்து நின்றதென்று மேடைதோறும் முழங்கி நம் புதுவை மாநிலத்திற்கு பெருமை சேர்த்த போற்றுதலுக்குரிய தலைவர் டாக்டர் கலைஞர். தமிழுக்காக, தமிழினத்திற்காக இவர் ஆற்றிய தொண்டு என்றும் நிலைத்து நிற்கும்.

    வைர விழா காணும் வாழும் முத்தமிழ் அறிஞர், தூய உள்ளம் படைத்த தூய்மையான தலைவர். டாக்டர் கலைஞர் பல்லாண்டு காலம் வாழ்ந்து தமிழினத்திற்கு பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டுகிறேன்.

    தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் டாக்டர் கலைஞர் அவர்களின் வைர விழா வரலாற்று சிறப்பு மிக்க விழாவாக திகழ புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் உளமார வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×