search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ மாணவர் சேர்க்கை பிரச்சினை: கவர்னர் கிரண்பேடிக்கு நாராயணசாமி எச்சரிக்கை
    X

    மருத்துவ மாணவர் சேர்க்கை பிரச்சினை: கவர்னர் கிரண்பேடிக்கு நாராயணசாமி எச்சரிக்கை

    மருத்துவ மாணவர் சேர்க்கை பிரச்சினை தொடர்பாக புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு, முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வருகிறது.

    புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் தனக்குத்தான் அதிக அதிகாரம் இருக்கிறது என்று கூறி கவர்னர் கிரண்பேடி அன்றாட அலுவல் பணிகளிலும் தலையிட்டு வருகிறார். அமைச்சரவை செய்ய வேண்டிய பணிகளிலும் கவர்னரே அதிகாரிகளை அழைத்து உத்தரவுகளை பிறப்பிக்கிறார்.

    இதனால் புதுவையில் இரட்டை அரசு செயல் படுவது போன்ற ஒரு தோற்றம் உள்ளது. கவர்னரின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் மத்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    அதே நேரத்தில் கவர்னரும் அமைச்சரவை மீது மத்திய அரசிடம் புகார் கூறி இருக்கிறார்.

    இவ்வாறு இரு தரப்பினரின் மோதலும் நீடித்து வந்த நிலையில் புதுவை தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களை நிரப்புவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதில் முறை கேடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின.

    இதையடுத்து கவர்னர் கிரண்பேடி நேரடியாக தலையிட்டு மாணவர் சேர்க்கையில் பல்வேறு மாற்றங்களை செய்தார்.


    இந்த பிரச்சினையிலும் அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு உருவானது.

    இந்த பிரச்சினை இன்று சட்டசபையில் எதிரொலித்தது. இது தொடர்பாக சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிக்கையை சமர்பித்து பேசியதாவது:-

    கடந்த ஆண்டுகளில் மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பில் புதுவை மாணவர்களுக்கு ஒதுக்கீடு கிடையாது. எங்களின் தொடர்விடா முயற்சியால் மத்திய அரசிடம் இருந்து முதல்முறையாக இந்த ஆண்டு புதுவை மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு பெற்றோம்.

    கடந்த 30-ந்தேதி கவர்னர் சென்டாக் அலுவலகம் சென்று அரசு ஒதுக்கீட்டு இடங்களை தனியார் நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளனர் என தவறான குற்றச்சாட்டை தெரிவித்தார். சென்டாக் கன்வீனரிடம் சில மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டு கடிதம் வழங்கும்படியும் உத்தரவிட்டார். இது முற்றிலும் சரியானதல்ல, தவறான வழிநடத்தலாகும். இந்திய அரசு, மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படியே எஞ்சிய இடங்கள் அகில இந்திய மாணவர் ஒதுக்கீட்டிற்கு சென்றுவிடும். இதில் மாநில அரசின் விருப்பம் ஏதும் இல்லை. நாட்டின் அனைத்து பகுதியிலும் இந்த நடைமுறையே கடைபிடிக்கப்படுகிறது.

    இப்பிரச்சினை பற்றி பேசினால் கவர்னரை விமர்சிக்க வேண்டியது வரும் என்பதால்தான் பேச விரும்பவில்லை. ஆனால் வேறு வழியின்றி பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. கவர்னர் வாட்ஸ்-அப், டுவிட்டரில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மாணவர்கள் சேர்க்கை விவகாரத்தில் ஊழல் செய்துள்ளனர் என கருத்து தெரிவித்துள்ளார்.

    கவர்னருக்கு இதைச்சொல்ல எந்த அதிகாரமும் இல்லை. அவரிடம் ஆதாரம் இருந்தால் சபைக்கு கொடுத்துவிடட்டும். நாங்கள் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். ஆதாரமில்லாமல் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கவர்னர் விமர்சிப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அரசு மீது அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சென்டாக் மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் பேசியதாவது:-

    சமீபநாட்களாக கவர்னர் ஒரு நாடகத்தை நடத்தி வருகிறார். அதற்கு நான் பதில் கூற விரும்புகிறேன். மாணவர் சேர்க்கை தொடர்பாக கடந்த 5 மாதமாக தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகம்,சென்டாக் அதிகாரிகள், மாணவர் பெற்றோர் சங்கத்தினரிடம் பேசி வருகிறேன். 2 முறைடெல்லிக்கும் சென்றுள்ளேன்.

    பட்டமேற்படிப்பில் முதல் முறையாக அரசு இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டுபு 101 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ரூ.5 1/2 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் அனைவரையும் கல்லூரியில் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு.

    கவர்னர் சேர்த்த மாணவர்களை சேர்க்க வேண்டியது அவர் பொறுப்பு. சென்டாக்கில் தேர்வு செய்த மாணவர்கள் அனைவரையும் இன்றே கல்லூரிக்கு நேரடியாக நானே சென்று சேர்ப்பேன்.

    கவர்னர் அரசு அதிகாரிகளைப்பற்றி தவறாக பேசி வருகிறார். தலைமை செயலாளரைப்பற்றியும் விமர்சித்து வருகிறார். அவருக்கு கவர்னராக இருக்கும் தகுதியே இல்லை என்று ஆவேசமாக மேஜையை தட்டி தெரிவித்தார். இதை ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி வரவேற்றனர்.

    Next Story
    ×