search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிகள் திறப்பது தள்ளி போனதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு
    X

    பள்ளிகள் திறப்பது தள்ளி போனதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு

    தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தள்ளி போனதால், ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
    ஊட்டி:

    தமிழகத்தில் உள்ள சமவெளி பகுதிகளில் வெயில் வாட்டி வதைப்பதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் ஊட்டிக்கு சுற்றுலா வருகின்றனர். மேலும் ஊட்டியில் கோடை சீசனையொட்டி, கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ஊட்டியில் ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி மற்றும் குன்னூரில் நடைபெற்ற பழக்கண்காட்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.

    கோடை விழா முடியும் தருவாயில் இருந்தாலும், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு அதிகளவில் வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 7–ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி போனதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அங்குள்ள ரோஜா மலர்கள், கார்னேசன் மலர்களை கண்டு ரசித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் சூட்டிங்மட்டம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான சினிமா படப்பிடிப்புகள் நடைபெற்று உள்ளன. தற்போது சூட்டிங் மட்டத்தில் சினிமா படப்பிடிப்பு நடைபெறவில்லை. அதனால் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் சூட்டிங் மட்டத்திற்கு சென்று இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர். மேலும் அங்கிருந்து தெரியும் பல்வேறு மலைத்தொடர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. அதனை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் குதிரை சவாரி செய்து மகிழ்கின்றனர்.

    தலைகுந்தா பகுதியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் உள்ள பைன் பாரஸ்ட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி விட்டு, அடர்ந்து வளர்ந்திருக்கும் பைன் மரங்களை பார்வையிட்டும், அங்கு நின்று புகைப்படம் எடுத்தும் உற்சாகம் அடைகின்றனர். மேலும் அங்குள்ள காமராஜ் சாகர் அணையோரம் நின்றபடி கடல்போல் தெரியும் தண்ணீரை கண்டு ரசிக்கின்றனர். அதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அணையையொட்டி குதிரை சவாரி செய்து இயற்கை காட்சிகளை ரசித்து செல்கின்றனர்.

    இங்கு குழந்தையுடன் பெற்றோர் குதிரை சவாரி செல்ல ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளுடன் குதிரை சவாரி செய்து மகிழ்கின்றனர்.
    Next Story
    ×