search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதிப்பொருள் கலந்த பாலைக் குடித்தால் உயிரே போகும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X

    வேதிப்பொருள் கலந்த பாலைக் குடித்தால் உயிரே போகும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    வேதிப்பொருள் கலந்த பாலைக் குடித்தால் உயிரே போகும் அபாயம் உள்ளது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தனியார் நிறுவனங்களில் பாலில் உடலுக்கு கேடு விளைவிக்கும் வேதிப்பொருள் கலப்படம் செய்யப்படுவதாக தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக தெரிவித்து இருந்தார். 

    இதனையடுத்து மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில் அரசின் ஆவின் பாலை விட தனியார் நிறுவனங்களின் பாலை தான் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    அமைச்சரின் குற்றச்சாட்டை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பால் கலப்பட பிரச்சனை குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். கலப்படம் செய்யும் நிறுவனங்களில் பட்டியலை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

    இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பால் கலப்பட பிரச்சனை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. 



    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:-

    தற்போது வரை தகவல் கிடைத்துள்ள கலப்படம் செய்த நிறுவனங்களின் பெயர்களை வெளியிட முடியாது. அந்த நிறுவனங்களில் பால் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சோதனை முடிவுகள் கிடைத்த பின் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

    ஒருசில தனியார் பாலில் உயிரை கொல்லும் அமிலங்கள் கலக்கப்படுகின்றன. வேதிப்பொருள் கலந்த பாலைக் குடித்தால் உயிரே போகும். கலப்படத்தை தடுக்க வேண்டும் என்பதே குறிக்கோள். எந்த நிறுவனத்தை பழிவாங்கும் நோக்கம் கிடையாது. தரமான ஆவின் பாலை வாங்குங்கள். இந்த பிரச்சனைக்கு பிறகு ஆவின் பால் விற்பனை கூடி இருக்கிறது. 

    தரம் குறைவான பால் மூலம் பாதிப்பு ஏற்படுவதில்லை, கலப்பட பாலினால் தான் பாதிப்பு ஏற்படுகிறது. தனியார் பாலில் கலப்படம் செய்வது உறுதியாகியுள்ளது. தனியார் பால் நிறுவனங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும் என முதல் அறிவுறுத்தினார்.

    இவ்வாறு தெரிவித்தார்.
    Next Story
    ×