search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘உள்ளங்கையில் சான்றிதழ்’ திட்டம்: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
    X

    ‘உள்ளங்கையில் சான்றிதழ்’ திட்டம்: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

    “உள்ளங்கையில் சான்றிதழ்” என்ற திட்டத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இணைய வழியாக துவக்கி வைத்தார்.

    சென்னை:

    சேலம், ஜாகீர் அம்மா பாளையத்தில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம் 50,000 சதுரடி பரப்பளவில் 19 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் தகவல் தொழில் நுட்ப கட்டடத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    இந்தச் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள இக்கட்டடம் முழுமையாக செயல்படும்போது சுமார் 1000 நபர்களுக்கு நேரடியாகவும், சுமார் 2000 நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் அமைந்துள்ள தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம் 3,524 சதுரடி பரப்பளவில் 1 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாகக் கட்டடத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மூலம் தமிழ் மென் பொருள்களை உருவாக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 15 தமிழ் மென்பொருட்கள் உருவாக்க திட்டமிடப்பட்டு, அவற்றுள் “தமிழிணையம் ஒருங்குறி மாற்றி” மற்றும் “தமிழிணையம் ஒருங்குறி எழுத்துக்கள்” ஆகிய 2 தமிழ் மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த தமிழ் மென்பொருட்களை இணையதளம் வாயிலாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    அரசு இ-சேவை மையங்கள் மூலம் சேவைகளை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அனைத்து இசேவை மையங்களிலும் 2.5.2017 முதல் அரசு சேவைகளை பெற விரும்பும் விண்ணப்பதாரர்களின் கைப்பேசி எண்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

    இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அவர்களது சான்றிதழ்களுக்கு ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன் அவர்களது பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக சிறிய இணைய முகவரி அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய “உள்ளங்கையில் சான்றிதழ்” என்ற திட்டத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இணைய வழியாக துவக்கி வைத்தார்.


    இதன்மூலம் பொதுமக்கள் இணையத்தின் உதவியுடன் அவர்களது வீட்டிலிருந்தபடியே கைபேசி மூலமாக சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளவும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட வேளாண் இணை இயக்குநர்களின் பணிகளை மேலும் மேம்படுத்தும் வகையில், அவர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 1 கோடியே 45 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 17 வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், 5 வாகன ஓட்டுநர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினார்.

    Next Story
    ×