search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    500-க்கு 492 மதிப்பெண்கள் எடுத்து சென்னை மாணவர் சாதனை
    X

    500-க்கு 492 மதிப்பெண்கள் எடுத்து சென்னை மாணவர் சாதனை

    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 492 மதிப்பெண்கள் எடுத்து சென்னை மாணவர் சாதனை படைத்து உள்ளார்.
    சென்னை:

    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் சென்னை மண்டலம் 92.6 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது.

    இந்த தேர்வில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளி மாணவர் பி.சுந்தர் ராமன், 492 மதிப்பெண்கள் எடுத்து உள்ளார். இவர் கணிதம், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய படங்களில் தலா 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். இயற்பியலில் 99 மதிப்பெண்களும், ஆங்கில விருப்ப பாடத்தில் 93 மதிப்பெண்களும் பெற்று உள்ளார்.

    இவரது தந்தை பிரகாஷ் அக்கவுண்டன்ட் ஆக இருக்கிறார். தாயார் பெயர் பி.ரேவதி. இவர்கள் சென்னை தியாகராயநகரில் உள்ள சிவாஜி தெருவில் வசித்து வருகின்றனர்.

    சுந்தர் ராமன் கூறுகையில், “ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை நன்றாக எழுதி உள்ளேன். ஐ.ஐ.டி.யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்து படித்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவேன்” என்றார்.

    சென்னை நங்கநல்லூர் மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளி மாணவி ஆர்.ரம்யா, 491 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்து உள்ளார். அவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

    தமிழ்- 99, ஆங்கிலம்- 96, கணிதம்- 99, வேதியியல்- 99, இயற்பியல்- 98.

    ரம்யா கூறுகையில், “ஏரோநாட்டிக்கல் படித்து என்ஜினீயர் ஆவேன்” என்றார். அவரது பெற்றோர் ராஜகோபால்-அனுராதா. இவர்கள் நங்கநல்லூரில் வசித்து வருகின்றனர்.

    சென்னை அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மாணவி பென்னிட்டா 490 மதிப்பெண்கள் எடுத்து அந்த பள்ளியில் முதல் இடம் பெற்று உள்ளார். இவர், தனது பெற்றோர் டேவிட் ஞானசேகர்-ஜெயசுந்தரி, தம்பி பெனியல் ஆகியோருடன் அண்ணாநகரில் வசித்து வருகிறார். அவர் சி.ஏ. படிக்க இருப்பதாக கூறினார்.

    எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியின் முதல்வர் ராதிகா உன்னி கூறுகையில், “நாங்கள் இந்த வருடம் 301 மாணவ-மாணவிகளை சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுக்கு அனுப்பினோம். அனைவரும் நல்ல மதிப்பெண்களுடன் 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளனர். எங்கள் பள்ளியில் 2-ம் இடத்தை மாணவர் பாலாஜி 489 மதிப்பெண்கள் எடுத்து பெற்றுள்ளார்” என்றார்.

    மாற்றுத்திறனாளி மாணவர்களை பொறுத்தவரை இந்திய அளவில் திருவனந்தபுரம் மாணவர் அஜய் ஆர்.ராஜ் 490 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடம் பெற்று உள்ளார். பாலக்காட்டை சேர்ந்த மாணவி லட்சுமி 486 மதிப்பெண்கள் எடுத்து 2-ம் இடத்தை பிடித்து உள்ளார்.

    கிருஷ்ணகிரியை சேர்ந்த நாலந்தா சர்வதேச பொதுப்பள்ளி மாணவி தர்ஷணா 483 மதிப்பெண்கள் எடுத்து 3-வது இடத்தை பிடித்து இருக்கிறார். 
    Next Story
    ×