search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி ரக்ஷா கோபால்.
    X
    மாணவி ரக்ஷா கோபால்.

    சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 முடிவு வெளியானது: நொய்டா மாணவி ரக்ஷா முதலிடம்

    சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நொய்டாவைச் சேர்ந்த மாணவி ரக்ஷா கோபால் 99.6 சதவீத மதிப்பெண் எடுத்து நாட்டிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
    சென்னை:

    மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) ‘பிளஸ் 2’ வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி முடிவடைந்தது.

    இந்தியா முழுவதும் 10 லட்சத்து 98 ஆயிரத்து 891 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். சென்னை மண்டலத்தில் 61 ஆயிரம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

    இதில் கருணை மதிப்பெண் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் முடிவுகள் வெளியிடப்படுவதில் தாமதம் ஆனது. இந்த நிலையில் கருணை மதிப்பெண் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டதை டெல்லி கோர்ட்டு ரத்து செய்தது.

    இதையடுத்து தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. ஆன்லைனில் மட்டுமே தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் முடிவுகளை மாணவ - மாணவிகள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பார்த்து தெரிந்து கொண்டனர்.



    நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. தேர்ச்சி விகிதம் 82 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 1 சதவீதம் குறைவு ஆகும்.

    டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவைச் சேர்ந்த மாணவி ரக்ஷா கோபால் 99.6 சதவீத மதிப்பெண் எடுத்து நாட்டிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் நொய்டா எமைட்டி சர்வதேச பள்ளியில் படித்தார்.

    தென் மாநிலங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தப் பள்ளி மாணவி பெனித்தா 500-க்கு 490 மதிப்பெண்கள் (காமர்ஸ்) எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.


    மாணவி பெனித்தா

    இவரது தந்தை டேவிட் ஞானசேகர் ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றுகிறார். தாய் ஜெயசுந்தரி. தம்பி பெயர் பெனியல். மாணவி பெனித்தா கூறும் போது, சி.ஏ. படித்து ஆடிட்டர் ஆவதே லட்சியம். ஆசிரியர்கள், பெற்றோர் அளித்த ஊக்கத்தால் சாதனை படைக்க முடிந்தது என்றார்.

    இதே பள்ளியில் மாணவர் பாலாஜி (489 மதிப்பெண்) எடுத்து 2-வது இடத்தையும், மாணவர் பிரதீப் (488) 3-வது இடத்தையும் பிடித்தனர். சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பற்றி முதல்வர் ராதிகா உண்ணி பாராட்டி வாழ்த்தினார்.
    Next Story
    ×