search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவளக்குப்பம் அருகே தீ விபத்து: 10 வீடுகள் எரிந்து சாம்பல்
    X

    தவளக்குப்பம் அருகே தீ விபத்து: 10 வீடுகள் எரிந்து சாம்பல்

    தவளக்குப்பம் அருகே இன்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 வீடுகள் எரிந்து சாம்பல் ஆனது. இதில் ரூ.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தது.

    பாகூர்:

    புதுவை தவளக்குப்பம் அருகே இடையார்பாளையத்தில் என்.ஆர். நகர் உள்ளது. இந்த நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கூரை வீடுகளிலேயே குடியிருந்து வருகிறார்கள்.

    இன்று காலை 11 மணியளவில் இங்குள்ள ஒரு கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதில் வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதனால் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முடியவில்லை. மேலும் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து வெளியேறினர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுவை தீயணைப்பு படையினர் 2 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். எனினும் 10 வீடுகள் முற்றிலும் எரிந்து போனது.

    மேலும் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சேதமானது. அதோடு வீடுகளில் வைத்திருந்த டி.வி., பிரிட்ஜ், கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர் மற்றும் ரொக்கப் பணம் நகை உள்ளிட்டவையும் எரிந்து போனது. இதன் மொத்த சேத மதிப்பு ரூ.5 லட்சத்துக்கும் மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், ஜெய மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீடு இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினர்.

    மேலும் தகவல் அறிந்த முதல்-அமைச்சர் நாராயணசாமியும் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். உடனடியாக அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த தீ விபத்து குறித்து தவளக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×