search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான முன்னாள் வங்கி மேலாளர் சுஜன் சும்மர் மாத்யு.
    X
    கைதான முன்னாள் வங்கி மேலாளர் சுஜன் சும்மர் மாத்யு.

    ரூ.2 கோடி மோசடி வழக்கில் கோவை முன்னாள் வங்கி மேலாளர் கைது

    கோவையில் ரூ.2 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் வங்கி மேலாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (வயது 70). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுபத்ரா.

    கிருஷ்ணமூர்த்தி, தனது மனைவி மற்றும் தங்கை பத்மவேணி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கு கடந்த 2007-ம் ஆண்டில் அவரது குடும்ப சொத்து ரூ.2 கோடி கிடைத்தது. இந்த பணத்தை முதலீடு செய்வது தொடர்பாக கிருஷ்ண மூர்த்தி, தனது நண்பரும், சிவானந்த காலனியில் வசித்து வரும் தனியார் வங்கி மேலாளருமான சுஜன் சும்மர் மாத்யுவை சந்தித்தார்.

    அப்போது அவர் தனது வங்கியில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என கிருஷ்ணமூர்த்தியிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து ரூ.2 கோடி பணத்தை வங்கி மேலாளர் சுஜன் சும்மர் மாத்யுவிடம் வழங்கினார். இந்த பயணத்தை கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி, மற்றும் தங்கை ஆகிய 3 பேரின் கூட்டு கணக்கில் டெபாசிட் செய்வதாக அவர் தெரிவித்தார்.

    ஆனால் சுஜன் சும்மர் மாத்யு, 3 பேரின் பெயருடன் தனது பெயரையும் இணைத்து டெபாசிட் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் ரூ.2 கோடி பணத்துக்கு வட்டியாக மாதம் ரூ.90 ஆயிரம் ஒரு வருடத்துக்கு வழங்கினார்.

    அதன் பின்னர் வட்டி கொடுப்பதை நிறுத்தி விட்டார். இதையடுத்து அவர் திடீரென தலைமறைவாகி விட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, வங்கிக்கு சென்று கேட்டார். அப்போது வங்கி மேலாளர் சுஜன் சும்மர் மாத்யு ரூ.2 கோடியை எடுத்து மோசடி செய்தது தெரிய வந்தது.

    இதற்கிடையே அவர் தலைமறைவாகி இருந்து வந்ததால் வங்கி நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியது.

    இதைதொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த சுஜன் சும்மர் மாத்யுவை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சுஜன் சும்மர் மாத்யுவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை ஜே.எம். 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    Next Story
    ×