search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை, மதுரை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம்
    X

    சென்னை, மதுரை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம்

    சென்னை, மதுரை பல்கலைக்கழக துணைவேந்தர்களை கவர்னர் நியமித்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த பல்கலைக் கழகங்களின் சட்டத்தின்படி துணை வேந்தர் நியமனத்துக்கு 3 அல்லது 5 பேர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவால் பரிந்துரைக்கப்படும் 3 பேர் அடங்கிய பட்டியலில் இருந்து கவர்னர் ஒரு நபரை தேர்வு செய்து அதன் அடிப்படையில் துணைவேந்தர் நியமனம் நடைபெறுகிறது.

    தற்போது தமிழ்நாட்டில் 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் இல்லாமல் இருப்பதற்கான பல்வேறு காரணத்தை அனைவரும் அறிவார்கள்.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு 2 ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாமல் இருந்தது. அதில் செனட் உறுப்பினராக இருந்த ராமசாமி ராஜினாமா செய்தபிறகு இந்த இடத்துக்கு ராமகிருஷ்ணன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அதைத்தொடர்ந்து இப்போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு அதன் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரையை கவர்னர் நியமித்துள்ளார்.

    சென்னை பல்கலைக் கழகத்துக்கு 1½ ஆண்டுகளாக துணை வேந்தர் இல்லாமல் இருந்தது. இதற்கான தேர்வு கமிட்டியில் சுரேந்திரபிரசாத் இல்லாத காரணத்தால் அதற்கான நடைமுறை தள்ளிப் போனது. இப்போது அதுவும் சரி செய்யப்பட்டு துரைசாமி சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


    அண்ணா பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க மோகன், எபினேசர் ஜெயக்குமார், கருணா மூர்த்தி ஆகிய 3 பேர் பெயர் பரிசீலிக்கப்பட்டது. அவர்களிடம் கவர்னர் நேற்று நேர்காணல் நடத்தினார். ஆனால் கவர்னர் எதிர்பார்த்த அளவுக்கு அவர்களிடம் அதற்கான தகுதி இல்லை எனக்கருதி அந்த 3 பேரையும் தேர்வு செய்யாமல் விட்டு விட்டார்.

    கவர்னர் கேட்ட கேள்விகளுக்கு அவர்களிடம் சரியான பதில் இல்லை என்பதால் நிராகரிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதில் கவர்னருக்கு உள்நோக்கம் எதுவும் கிடையாது.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் 7 லட்சத்து 33 ஆயிரம் மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். அவர்களை பாதுகாக்கும் வகையில் பல்கலைக்கழகத்தை திறம்பட நிர்வகிக்க தேர்வு குழு பரிந்துரைத்த 3 பேர்களிடமும் தகுதி குறைவாக இருப்பதாகவும், மீண்டும் வேறுநபர்களை தேர்வு செய்யுமாறும் கவர்னர் கூறியுள்ளார்.

    அதன் அடிப்படையில் தேர்வுக்குழு மீண்டும் புதிதாக 3 பேரை தேர்வு செய்து அந்த பட்டியலை கவர்னருக்கு அனுப்புவார்கள். எனவே 4 மாத காலத்திற்குள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க வாய்ப்பு உள்ளது.

    உயர் கல்வித்துறையில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் சென்னை பல்கலைக் கழகத்தை தவிர மீதமுள்ள 12 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிப்பது தொடர்பான பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    அதன்படி 12 பல்கலைக் கழகங்களுக்கு துணை வேந்தரை தேர்வு செய்ய 3 பேர் அல்லது 5 பேர் கொண்ட தேர்வுக்குழு நியமிக்கப்பட்டு அவர்கள் பரிந்துரைக்கும் நபர்களில் ஒருவரை கவர்னர் நியமனம் செய்வார்.

    துணைவேந்தர் பணியிடம் காலியாகும் தேதிக்கு 6 மாதத்துக்கு முன்பு தேர்வுக்குழுவுக்கான உறுப்பினர்களை கவர்னர், அரசு, பல்கலைக்கழக அதிகார அமைப்பு நிர்ணயம் செய்யும். இந்த பணியை துணைவேந்தர் பியிடம் காலியாகும் தேதிக்கு 4 மாதத்துக்கு முன்பு முடிக்கப்படும். துணைவேந்தர் பதவிக்கான கல்வி தகுதியும் நிர்ணயம் செய்யப்படும்.

    உயர் கல்வித்துறையில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது உயர் கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் உடன் இருந்தார்.
    Next Story
    ×