search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் பால்விலை உயர்ந்த போது அரசு தடுக்காதது ஏன்? அமைச்சரின் புகாருக்கு பால்முகவர்கள் கண்டனம்
    X

    தனியார் பால்விலை உயர்ந்த போது அரசு தடுக்காதது ஏன்? அமைச்சரின் புகாருக்கு பால்முகவர்கள் கண்டனம்

    தனியார் பால்விலை உயர்ந்த போது அரசு தடுக்காதது ஏன் என்று அமைச்சரின் புகாருக்கு பால்முகவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில தினங்களாகவே தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன, தனியார் பாலை அருந்துவதால் குழந்தைகளுக்கு கூட புற்றுநோய் வருகிறது என தாங்கள் பேசி வருவதும், தங்களின் பேச்சிற்கு பால் முகவர்களாகிய நாங்கள் எங்களது சங்கத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிப்பதினால் அதிக லாபத்திற்காக ஆசைப்பட்டு பால் முகவர்கள் தனியார் பால் நிறுவனங்களை ஆதரிப்பதாகவும், பால் தட்டுப்பாடு என்பதற்காக வி‌ஷத்தையா அருந்த முடியும்? எனவும், தனியார் பால் நிறுவனங்கள் பால் முகவர்களை தூண்டி விட்டு பேச வைப்பதாகவும் தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாக தாங்கள் பேசி வருவது “மக்கள் சேவையே மகேசன் சேவை” என செயல்பட்டு வரும் லட்சக்கணக்கான பால் முகவர்களை கவலை கொள்ளச் செய்திருக்கிறது.

    பாலில் கலப்படம் தொடர்பான தங்களின் கருத்துக்களிலும், தங்களின் செயல்பாடுகளிலும் தான் நாங்கள் மாறுபட்டு நிற்கிறோமே தவிர கலப்பட பாலை தடுத்து, பொதுமக்களுக்கு தரமான பாலினை விநியோகம் செய்வதில் பால் முகவர்களாகிய நாங்கள் தங்களை விட மிக உறுதியாகவே இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டவர்களாகிறோம்.

    பாலில் கலப்படம் தொடர்பாக தாங்கள் தற்போது தான் பேசத் தொடங்கியுள்ளீர்கள். ஆனால் எங்களது சங்கத்தின் சார்பில் கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலே “உயிர்காக்கும் அத்தியாவசியப் பொருளாக விளங்கும் பாலில் கலப்படத்தை தடுக்க வேண்டும்“, அதற்கு “தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என தமிழக அரசுக்கு தொடந்து கோரிக்கைகளை முன் வைத்து வந்திருப்பதோடு, ஊடகங்கள் வாயிலாகவும் குரல் கொடுத்து வந்திருக்கிறோம்.

    மேலும் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பால் கலப்படம் தொடர்பாக கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலத்தில் தனியார் பால் நிறுவனங்கள் என்றோ, அரசுதுறை நிறுவனங்கள் என்றோ தனித்தனியாக பிரித்துக் கூறாமல் “பொதுமக்கள் அருந்தும் பாலில் 68 சதவீதம் கலப்படம்“ என பொதுவாகத் தான் தெரிவித்திருக்கிறது.

    பால்வளத்துறை அமைச்சரான நீங்கள் “தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன” என பொத்தாம் பொதுவாக பேசியிருக்கின்ற காரணத்தால் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பால் முகவர்களாகிய எங்களால் உரிய பதிலை கூற முடிய வில்லை. காரணம் ஆதார மற்ற தகவல் அடிப்படையில் எந்த நிறுவனம் பாலில் கலப்படம் செய்கின்றது என தெரியாமல் அவற்றை எப்படி எங்களால் புறக் கணிக்க முடியும்?

    கடந்த காலங்களில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விற்பனை விலையை உயர்த்திய போதெல்லாம் தமிழக அரசு தனியார் பால் நிறுவனங்களின் விற்பனை விலை உயர்வை தடுத்து நிறுத்தி அவற்றை வரன் முறைப்படுத்த வேண்டும் என 2008-ல் எங்களது சங்கம் துவக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்து தனியார் பால் நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு எதிராகவே செயல்பட்டு வந்திருக்கிறோம். ஆவின் நிறுவனம் பால் முகவர்களின் வாழ் வாதாரத்தைப் பற்றி கவலை கொள்ளாத போது, நாங்கள் தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தாலும் பால் முகவர்களின் வாழ்வாதாரத்தை தனியார் பால் நிறுவனங்களே காத்து வருகின்றன என்பது 100 சதவீதம் மறுக்க முடியாத உண்மை.

    மேலும் கடந்த 2014ம் ஆண்டு ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 10.00ரூபாய் உயர்த்தப்பட்ட போது தமிழக எதிர்க் கட்சிகள் தொடங்கி பல்வேறு அமைப்புகள் வரை அனைவரும் ஒருங்கே எதிர்த்து குரல் கொடுத்தனர். ஆனால் அப்போது தமிழக அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது எங்களது “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்“ மட்டும் தான். காரணம் விவசாயிகளுக்கு பால் கொள்முதல் விலையை தமிழக அரசு 8.00ரூபாய் வரை உயர்த்தி வழங்கிய காரணத்தால் இந்த விற்பனை விலை உயர்வு சரி என்கிற அடிப்படையில் தமிழக அரசுக்கு முழு ஆதரவை தெரிவித்தோம். அதே சமயம் தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு 2.00ரூபாய் விற்பனை விலையை உயர்த்தினாலே அதனை எதிர்த்து குரல் கொடுத்து அதனை உடனடியாக தடுத்து நிறுத்த கோரி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

    ஏனெனில் பல தனியார் பால் நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் வசம் சென்று விட்ட சூழ்நிலையில் அவற்றை வரன்முறைபடுத்தாமல் விட்டு விட்டால் அந்தந்த மாநில அரசுகளின் பால் நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்திக்கும், இந்திய பால்வளம் சுரண்டப்படும், பின்னர் பாலிற்காக நாம் அண்டை நாடுகளை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் தான்.

    இப்படி எல்லா வகைகளிலும் தமிழக அரசுக்கும், ஆவின் நிறுவனத்திற்கும் ஆதரவாக செயல்பட்டு வந்த எங்களது சங்கத்தினை தனியார் பால் நிறுவனங்கள் தூண்டி விட்டு பேச வைப்பதாக தாங்கள் கூறியிருக்கிறீர்கள். பொறுப்பான, எங்களது துறை சார்ந்த அமைச்சரான தங்களுக்கு உளவுத்துறை அதிகாரிகளின் அறிக்கையை கேட்டு பெற முடியும் என்கிற நிலை இருக்கும் சூழ்நிலையில் எங்களது “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்“ இதுவரை எந்த ஒரு தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது? என்பதை நீங்கள் கேட்டுப் பெறுங்கள்.

    அப்படி எங்களது சங்கம் ஏதாவது ஒரு தனியார் பால் நிறுவனத்திற்கு ஆதரவாக இதுவரை செயல்பட்டதாக நிரூபிக்கப்பட்டால் நான் எனது சொந்த பால் வணிகத்தை விட்டும், இந்த சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் என்கிற முறையில் எங்களது சங்கத்தின் தலைமை பொறுப்புகளில் இருந்து விலகி, பொது வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கிட தயாராக இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது சவால் அல்ல. இந்த உலகில் பிறந்தோம்.. ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல்... பொதுமக்கள் நலன் சார்ந்த பயணத்தில் முக்கியமான தருணத்தில் நாங்கள் எடுக்கும் முக்கியமான முடிவு இது.

    நாம் பிறப்பதும் ஒரு முறை, வாழ்வதும் ஒரு முறை, வாழும் வரை நமது வாழ்க்கை பிறருக்கு ஏதேனும் ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கட்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×