search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தை மகளிர் காங்கிரஸ் ஆதரிக்கும்: நடிகை நக்மா
    X

    மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தை மகளிர் காங்கிரஸ் ஆதரிக்கும்: நடிகை நக்மா

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தை மகளிர் காங்கிரஸ் ஆதரிக்கும் என சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற கோரி மத்திய அரசை வலியுறுத்தி மகளிர் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் கையெழுத்து இயக்கத்தை அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி ஷோபா, பொதுச்செயலாளர்கள் நடிகை நக்மா, ஹசீனா சையத் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் நடிகை நக்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்த சோனியாவும், ராகுலும் உத்தரவிட்டுள்ளனர். அதன் படி, தமிழகத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது மிக முக்கிய பிரச்சனையும் கூட. இந்த போராட்டத்துக்கு மகளிர் காங்கிரசின் ஆதரவு உண்டு. இதுபற்றி இன்று நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்திலும் பெண்களிடம் எடுத்துக் கூறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. ஆனால் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவேற்றவில்லை. கருப்பு பணம் மீட்கப்படும். ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால் செய்யவில்லை. ஊழல் நிறைந்த அரசாகத் தான் பா.ஜனதா அரசு செயல்படுகிறது.

    வேலையில்லா திண்டாட்டம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, விவசாயிகள் தற்கொலை போன்ற ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. ஆனால் இவை எதையும் மோடி கண்டு கொள்ளவில்லை.

    நேற்று அசாமில் அவர் திறந்து வைத்த பாலம் காங்கிரஸ் அரசால் கட்டப்பட்டது. பெண்கள் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார். ஆனால் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை இதுவரை நிறைவேற்றவில்லை.

    மோடியை பொறுத்தவரை ஒரு சிறந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் போல்தான் செயல்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதைத் தொடர்ந்து தமிழக மகளிர் காங்கிரஸ் செயற் குழு கூட்டம் நடந்தது. இதில் ஷோபா, நக்மா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி, விஜயதரணி எம்.எல்.ஏ., மாநில செயலாளர் திருப்பூர் மாலதி, மைதிலி, சுமதி, அன்பரசி, கவிதா, சாய்லட்சுமி, சாரதா தேவி, ஆவிஷ் மனோகரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×