search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூலை மாத கடைசியில் ரஜினி தனி கட்சி தொடங்குவார்: அண்ணன் சத்தியநாராயணா தகவல்
    X

    ஜூலை மாத கடைசியில் ரஜினி தனி கட்சி தொடங்குவார்: அண்ணன் சத்தியநாராயணா தகவல்

    ரஜினிகாந்த் ஜூலை மாத கடைசியில் தனி கட்சி தொடங்குவார். அந்த கட்சிக்கான பெயர், சின்னம் மற்றும் உள் கட்டமைப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணா கூறினார்.
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா - மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

    முதலில் சில கட்சிகளுக்கு ஆதரவாக “வாய்ஸ்’ கொடுத்து வந்த அவர் பிறகு எந்த கட்சிக்கும் ஆதரவாக பேசவில்லை.

    அரசியலில் ஒட்டாமல் இருந்து வந்த அவர் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந்தேதி ரசிகர்களை சந்தித்துப் பேசினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் “எந்திரன்” படத்துக்கு பிறகு தன் முடிவை அறிவிப்பதாக கூறினார். ஆனால் அப்போது அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

    என்றாலும் ‘லிங்கா’ பட இசை வெளியீட்டின் போது “அரசியலுக்கு வர வேண்டும் என்று இருந்தால் வருவேன்” என்றார். இதனால் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் கிளம்பியது. ஆனால் அதன் பிறகும் ரஜினி உறுதியான எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தார்.

    இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்தாலும், கருணாநிதியின் உடல் நலக்குறைவாலும் தமிழக அரசியலில் மிகப்பெரிய அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் வகையில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வலியுறுத்தினார்கள். இதையடுத்து ரசிகர்களை 2 கட்டமாக சந்தித்து புகைப்படம் எடுக்கவும், கருத்துக்களை அறியவும் ரஜினி முடிவு செய்தார்.



    அதன்படி கடந்த 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை அவர் 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழ்நாட்டில் அரசியல் எனும் சிஸ்டம் கெட்டு போய் கிடக்கிறது. எனவே போர் வரும்போது நாம் அதை சந்திக்க தயாராவோம்” என்றார். இதையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி அனைத்துக் கட்சி தலைவர்களும் கருத்து வெளியிட்டனர். பெரும்பாலான தலைவர்கள், ரஜினி அரசியலுக்கு வருவதை ஆதரித்தனர். ரஜினியின் நண்பர் ராஜ்பகதூரும் “ரஜினி அரசியலுக்கு வருவார்” என்றார்.

    ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று ஒரு அமைப்பு போராட்டம் நடத்திய போது கூட அவர் அதை கண்டு கொள்ளவில்லை. மாறாக தனது ரசிகர்கள் எல்லை மீறக்கூடாது என்று எச்சரித்தார். இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்பதை அவரது அண்ணன் சத்தியநாராயணா முதன் முதலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது மக்கள் விருப்பமாகும். இது தொடர்பாக அவர் தன் ரசிகர்களுடனும், தனது நல விரும்பிகளான நண்பர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது முதல் சுற்று ஆலோசனையை அவர் முடித்துள்ளார்.



    அடுத்த மாதம் (ஜூன்) மீண்டும் ரசிகர்களை சந்தித்து இரண்டாம் சுற்று ஆலோசனை நடத்தவுள்ளார். அவரது ரசிகர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக அவரை அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே ரஜினியின் அரசியல் பிரவேசம் தவிர்க்க முடியாதது.

    ரஜினி அடுத்து தனது ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறார். அதிகபட்சமாக எவ்வளவு ரசிகர்களை சந்திக்க முடியுமோ, அவ்வளவு ரசிகர்களை சந்தித்து விட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதன் பிறகே அவர் தனது முடிவை வெளியிடுவார்.

    பொதுமக்களிடமும், ரசிகர்களிடமும் அவருக்கு ஏகோபித்த ஆதரவு உள்ளது. எனவே ரஜினி எடுக்கும் முடிவும் அதற்கு நேர்மறையாக இருக்கும். அது தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் படைப்பதாக இருக்கும்.

    ரஜினி தனது முடிவை ஜூலை மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளார். அவரது அரசியல் வருகையின் முக்கிய நோக்கமே, பொது வாழ்வில் உள்ள ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்க வேண்டும் என்பதுதான்.

    அரசு சார்பில் நிறைய திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் அந்த பணம் ஏழை எளியவர்களுக்கு சென்று சேருவதில்லை. அதுபோல நலத்திட்டங்களின் பயன்களும் தேவைப்படுபவர்களுக்கு கிடைப்பதில்லை.

    ஏழைகளுக்கு அரசுத் திட்ட பலன்கள் உரிய வகையில் கிடைக்காமல் போவதற்கு காரணமே அடிமட்டம் வரை ஊழல் புகுந்து இருப்பதுதான். இந்த ஊழலை ரஜினியால் திறம்பட ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.



    ரஜினி அரசியலுக்கு வருவதை அறிந்துள்ள சில கட்சிகள் அவரை தங்களுடன் இணைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றன. அதற்காக சிலர் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் ரஜினி எந்த கட்சியிலும் சேர மாட்டார்.

    ரஜினி சொந்தமாக புதிய அரசியல் கட்சிதான் தொடங்குவார். அந்த கட்சிக்கான பெயர் மற்றும் சின்னம் மற்றும் உள் கட்டமைப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணா கூறினார்.

    ஆந்திராவில் சிரஞ்சீவி “பிரஜா ராஜ்ஜியம்“ எனும் கட்சியைத் தொடங்கியபோது சுமார் 20 சதவீத வாக்குகளைப் பெற்றார். ரஜினியும் தன் புதிய கட்சி மூலம் சுமார் 20 சதவீத வாக்குகளை பெற முடியும் என்று நம்புவதாக கூறப்படுகிறது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தன் பலத்தை நிரூபித்து காட்டவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதன் மூலம் 2021-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று அவர் நம்புவதாக தெரிய வந்துள்ளது.

    ரஜினி புதிய கட்சி தொடங்கினால் அது தமிழக அரசியலில் புதிய அலையை உருவாக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே அவருடன் கூட்டணி வைத்து கொள்ள பா.ஜனதா கட்சி இப்போதே காய்களை நகர்த்தத் தொடங்கி விட்டது.
    Next Story
    ×