search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முதல்-அமைச்சர் யார்?: சட்டமன்ற இணையதளத்தில் தகவலை மேம்படுத்தாததால் குழப்பம்
    X

    தமிழக முதல்-அமைச்சர் யார்?: சட்டமன்ற இணையதளத்தில் தகவலை மேம்படுத்தாததால் குழப்பம்

    தமிழ்நாடு சட்டமன்ற பேரவை இணையதளத்தில் தற்போதைய முதல்- அமைச்சர் யார்? என்ற தகவலை மேம்படுத்தாமல் இருப்பதால், அது பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மாநில முதல்-அமைச்சர்கள், மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள், மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகிப்பவர்கள் யார்?, அவர்களது பெயர் என்ன? என்ற கேள்விகள் போட்டி தேர்வுகளில் கேட்கப்படுகின்றன.

    பீகார் மாநில முதல்-மந்திரி யார்? என்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர்களிடமும், தமிழக முதல்-அமைச்சர் யார்? என்று ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மாணவர்களிடமும், பொது அறிவு திறனுக்காக போட்டித்தேர்வில் கேள்வி கேட்கலாம்.

    தற்போது தகவல் தொழில்நுட்பம் முன்னேறிவிட்டதால், அப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட துறையின் இணையதளத்தை பார்த்து தான் அந்த மாணவர்கள் பதில்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

    எனவே, அரசு துறை இணையதளங்களில் தகவல்கள் உடனுக்குடன் மேம்படுத்தப்பட வேண்டும்.

    அவ்வாறு செய்யவில்லை என்றால், இளைய சமுதாயத்தினருக்கு தவறான தகவல்களை கொடுப்பதாகிவிடும்.

    தமிழக முதல்-அமைச்சர் யார்? என்று வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள், தமிழக சட்டமன்ற பேரவை இணையதளத்தில் பார்த்தால், அவர்களுக்கு ஜெயலலிதா என்ற பதில் தான் கிடைக்கும்.

    ஏன் என்றால், அந்த இணையதளத்தில் தமிழக முதல்-அமைச்சர் என்று ஜெயலலிதா பெயர்தான் இன்னும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார். இதைத்தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். சிறிது காலத்துக்கு பின்னர், அவர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, தற்போது தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் பதவியை வகிக்கிறார். அவர் பதவி ஏற்று 100 நாட்களை எட்டியுள்ளது.

    ஆனால், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் இணையதளத்தில், 1920-ம் ஆண்டு முதல் தமிழக முதல்-அமைச்சர் பதவிகளை வகித்தவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இறுதியாக, தமிழக முதல்-அமைச்சராக 2015-ம் ஆண்டு மே 23-ந் தேதி முதல், ஜெயலலிதா பதவி வகித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இன்னும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்று இணையதளத்தில் குறிப்பிடுவது மக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும், ‘தகவல் தொழில்நுட்பம் உலகத்தையே சுருக்கிவிட்டது. உலகத்தில் எந்த ஒரு இடத்தில் உள்ள தகவல்களையும் இணையதளம் மூலம் பார்த்து தெரிந்துகொள்ளலாம். அப்படி இருக்கும்போது, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் இணையதளத்தில் தற்போது யார் முதல்-அமைச்சர்? என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்காமலும், தகவல்களை உடனுக்குடன் மேம்படுத்தாமல் இருப்பதும் சரியான நடவடிக்கை இல்லை’ என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.
    Next Story
    ×