search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் சிறப்பாக செயல்படுகின்றன: நக்மா
    X

    தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் சிறப்பாக செயல்படுகின்றன: நக்மா

    தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் சிறப்பாக செயல்படுவதாக நடிகை நக்மா கூறினார்.
    ஆலந்தூர்:

    அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நடிகை நக்மா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அரசியலுக்கு வருவது பற்றி ரஜினிகாந்த்தான் முடிவு எடுக்கவேண்டும். இதில் நான் என்ன கருத்து சொல்லமுடியும்? நான் ரஜினிகாந்தை சந்தித்து பேசினேன். ஏதாவது கட்சியில் இணைவதா? அல்லது தனிக்கட்சி தொடங்குவதா? என்பது பற்றி அவர்தான் தீர்மானிக்கவேண்டும்.

    தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் எப்படி இருக்கின்றன என்பது மக்களுக்கு தெரியும். தமிழகத்தில் 100 நாளில் நல்லாட்சி தந்ததாக கூறும் போது, விவசாயிகள் ஏன் டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள்?

    தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக சென்று பிரதமரை சந்தித்து பேசுகின்றனர். ஆனால் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது அவர்களை பார்க்க பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை. ரஜினிகாந்த் பற்றி பேசுவது தான் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முக்கியமானதாக இருக்கிறது.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குளம் தூர்வாரும் பணி உள்பட நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ரஜினிகாந்த்தும் பாராட்டி உள்ளார். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் சிறப்பாக செயல்படுகின்றன.

    மத்திய பாரதிய ஜனதா அரசு 3 ஆண்டுகள் நிறைவை கொண்டாடுகிறது. எதற்காக கொண்டாடுகின்றனர்? நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு போய்விட்டது. நாட்டில் என்ன திட்டங்களை நிறைவேறி இருக்கிறார்கள்? நிறைய திட்டங்களை நிறைவேற்றியதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் எதுவுமே செய்யவில்லை என்று மக்களுக்கு தெரியும்.

    காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசிடம் என்ன கொள்கை இருக்கிறது? பசுவதை என கூறி சிலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

    தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் என்பதால் அடிக்கடி வந்து பெண்களின் பிரச்சினைகளில் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி ஆய்வு செய்கிறேன். நான் தேர்தலில் போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு நடிகை நக்மா கூறினார்.
    Next Story
    ×