search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவுடிகள், போலீசாருடன் சேர்ந்து வீட்டை அபகரித்ததாக ஐகோர்ட்டில் வழக்கு: கட்டிடத்தை இடிக்க தடை
    X

    ரவுடிகள், போலீசாருடன் சேர்ந்து வீட்டை அபகரித்ததாக ஐகோர்ட்டில் வழக்கு: கட்டிடத்தை இடிக்க தடை

    இளம்பெண்ணை சிறையில் அடைத்து ரவுடிகள், போலீசாருடன் சேர்ந்து வீட்டை அபகரித்ததாக ஐகோர்ட்டில் தொடரப்பட்டிருந்த வழக்கில் கட்டிடத்தை இடிக்க தடை செய்யப்பட்டது.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், திருவல்லிக்கேணியை சேர்ந்த ஆயிஷா சைனுதீன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் இந்து மதத்தை சேர்ந்தவள். சைனுதீன் என்னை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். இதன்பின்னர், நான் முஸ்லிம் மதத்துக்கு மாறி விட்டேன். என் கணவரின் குடும்பத்துக்கு திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் 6.5 கிரவுண்ட் நிலமும், அதில் வீடும், 19 கடைகளும் உள்ளன. இந்த நிலையில், என் கணவரின் சகோதரர் பைசூலுதீன், அவரது குடும்பத்தினரும், என் கணவரின் மூத்த மனைவி மற்றும் அவரது பிள்ளைகளும், கேரளாவில் வசிக்கின்றனர்.

    இதனால், திருவல்லிக்கேணியில் உள்ள வீட்டில் நானும் என் கணவரும் வசித்து வந்தோம். எங்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், என் கணவர் இறந்து விட்டார். இதனால், இந்த கட்டிடத்தில் உள்ள கடைகளை நடத்துபவர்கள், என்னிடம் வாடகை தொகை செலுத்தி வந்தனர்.

    இதுபோல என் கணவருக்கு கேரளாவிலும் சொத்துக்கள் உள்ளன. கேளராவில் உள்ள சொத்துக்கள் தொடர்பாக என் கணவரின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், இரண்டாவது மனைவியான எனக்கும் சொத்தில் பங்கு உள்ளது என்று கேரளா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில், திருவல்லிக்கேணியில் உள்ள கடைகளை காலி செய்யும்படி, என் கணவரின் சகோதரர் மற்றும் மூத்த மனைவி குடும்பத்தினர் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு சாதகமான தீர்ப்பும் கிடைத்தது. இந்த உத்தரவை எதிர்த்து வாடகைதாரர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றும், சாதகமான உத்தரவுகளை பெற முடியவில்லை. இதனால், அவர்கள் கடைகளை காலி செய்ய தயாரானார்கள். சென்னை சிவில் கோர்ட்டும், இவர்களை கடைகளை காலி செய்யும்படி உத்தரவிட்டது.

    அதாவது கடைகள் உள்ள பகுதியாக 4 ஆயிரத்து 816 சதுர அடி நிலத்தை தான் காலி செய்ய கோர்ட்டு உத்தர விட்டிருந்தது.

    இந்த நிலையில், கடந்த 14ந் தேதி ராயப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் என் வீட்டிற்கு வந்து, என்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

    பகல் முழுவதும் எந்த ஒரு விசாரணையும் செய்யாமல், போலீஸ் நிலையத்தில் என்னை உட்கார வைத்திருந்தனர். பின்னர், மாலையில் என் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்து விட்டனர்.

    இதன்பின்னர், கோர்ட்டு உத்தரவை கொண்டு வந்த கோர்ட்டு ஊழியர் கந்தன், கலீம், உத்தமன், சிவகுமார், சில வக்கீல்கள், உதவி கமி‌ஷனர்கள் சங்கர், குமார், இன்ஸ்பெக்டர்கள் மகேஷ்குமார், கந்தவேல், ரங்கநாதன், அகிலன்ராஜ், ஜெகநாதன் உட்பட 5 சப்-இன்ஸ்பெக்டர்கள், 30-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள், ரவுடிகள் என்று ஒரு கும்பல் என் வீட்டிற்கு வந்தனர். கோர்ட்டு உத்தரவிட்ட கடைகளுடன் சேர்த்து, நான் குடியிருந்த வீட்டையும் காலி செய்தனர்.

    வீட்டில் இருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை எல்லாம் தூக்கி வெளியில் வீசினர். என்னுடைய வளர்ப்பு மகள், சகோதர, சகோதரிகளையும் வெளியேற்றினர்.

    இதுகுறித்து போலீஸ் கமி‌ஷனரிடம் 19ந் தேதி நேரடியாக சென்று புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது என் கணவரின் சகோதரர், என் கணவரின் மூத்த மனைவியின் குடும்பத்தினர், போலீஸ் மற்றும் ரவுடிகளின் துணையுடன், நான் குடியிருந்த சொத்தை அபகரித்து விட்டனர். அவர்கள், அந்த இடத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களையும் இடித்து தள்ள முயற்சிக்கின்றனர். எனவே, அந்த கட்டிடத்தை இடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

    கோர்ட்டு உத்தரவிட்ட பகுதியை தவிர, நான் குடியிருந்த வீடு உள்ளிட்ட கட்டிடத்தை அதே நிலையில் இருப்பதை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க ராயப்பேட்டை இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.மாணிக்கவேல் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘சட்டவிரோதமாக மனுதாரர் குடியிருந்த வீட்டையும் எதிர் மனுதாரர்கள் அபகரித்துள்ளனர். தற்போது அந்த வீட்டை எந்தநேரமும் அவர்கள் இடித்து விடுவார்கள். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் வக்கீல் வாதிட்டார். எனவே, இந்த மனுதாரர் குடியிருந்த வீட்டை எதிர்மனுதாரர்கள் இடிக்கக்கூடாது. இந்த மனுவுக்கு எதிர்மனுதாரர்கள் 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×