search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வட்ட வடிவ பாறையில் முகாமிட்டிருந்த 25 காட்டு யானைகள் விரட்டியடிப்பு
    X

    வட்ட வடிவ பாறையில் முகாமிட்டிருந்த 25 காட்டு யானைகள் விரட்டியடிப்பு

    வட்ட வடிவ பாறையில் முகாமிட்டிருந்த 25 காட்டு யானைகள் தாவரக்கரை காப்புக்காட்டிற்கு விரட்டியடிக்கப்பட்டன.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே போடூர்பள்ளம் வனப்பகுதியில் 25 காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய பயிர்களை தின்று அட்டகாசம் செய்து வந்தன. இதையடுத்து அந்த யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளங்கள் அடித்தும் விரட்டினர். பின்னர் அந்த யானைகள் தேன்கனிக்கோட்டை வட்ட வடிவ பாறை வனப்பகுதிக்கு வந்தன.

    இதுகுறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை வனச்சரகர் ஆறுமுகம் மற்றும் வனத்துறையினர் அந்த 25 யானைகளையும் பட்டாசு வெடித்தும், அதிக சத்தம் எழுப்பியும் வட்ட வடிவ பாறையில் இருந்து ஆலள்ளி, மரக்கட்டா வழியாக தாவரக்கரை காப்புக்காட்டிற்கு விரட்டியடித்தனர். இதற்கிடையே விரட்டப்பட்ட யானைகள் லக்கசந்திரம் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பயிரிட்டிருந்த பீன்ஸ், தக்காளி உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தியது. இந்த யானைகளை கர்நாடக மாநிலம் ஜவளகிரி காட்டிற்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதே போல சூளகிரி அருகே கும்பளம், தீர்த்தம் வனப்பகுதியில் 3 காட்டு யானைகள் நீண்ட நாட்களாக முகாமிட்டுள்ளன. இந்த 3 யானைகளும், நேற்று முன்தினம் இரவு சூளகிரி அருகே உள்ள கொடிதிம்மனபள்ளி கிராமத்திற்குள் புகுந்தன. அங்கு படேஸ்வரப்பா என்ற விவசாயியின் நிலத்திற்குள் புகுந்து அங்குள்ள ஆழ்துளை கிணறு மற்றும் தண்ணீர் செல்லும் குழாய்களை கால்களால் மிதித்து சேதப்படுத்தியது.

    மேலும் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்தன. இதையடுத்து அவைகள் அங்கிருந்து சென்று விட்டன. இந்த யானைகளை, கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என்று விவசாயிகளும், கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×