search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக மாணவர்களுக்கு தகுதியில்லை என்று சொல்பவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?: பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    தமிழக மாணவர்களுக்கு தகுதியில்லை என்று சொல்பவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?: பொன்.ராதாகிருஷ்ணன்

    ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு தகுதியில்லை என்று சொல்பவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என மணப்பாறை கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பா.ஜ.க. அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பெரியார் சிலை அருகே நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசினால் செய்ய முடியாத பல்வேறு சாதனைகளை கடந்த 3 ஆண்டுகளில் செய்துள்ளார் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி.

    29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், 707 மாவட்டங்கள், 125 கோடி மக்களின் சரித்திரத்தை 3 ஆண்டுகளில் மாற்ற முடியுமா என்கிற கேள்விக்கு முடியாது என்ற பதில் தான் கிடைக்கும்.

    பிரதமரின் திட்டமிடுதலும், செயல்பாடுகளும் உலகத்தை வியக்க வைத்துள்ளது. அச்சுறுத்தலான நாடுகளை தன் பதவியேற்பு விழாவுக்கு அழைத்தவர் தான் பிரதமர் மோடி. பதவியேற்ற நாளிலேயே முதல் காரியமாக அப்போதைய இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவை அழைத்த போது தமிழ்நாட்டில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பாகிஸ்தானும், இந்திய பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டார். ஆனால் அதற்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. ஆனால் ராஜபக்சே அழைப்புக்கு மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து செய்தியாளர்கள் என்னிடம் இலங்கையை அழைப்பது குறித்து கேள்வி கேட்டார்கள். 2009-ம் ஆண்டுக்கு பிறகு வரும் போதெல்லாம் நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது உண்மைதான். இப்போது நான் சொல்லுகிறேன். மோடி பிரதமராக இருப்பதால் பயம் வேண்டாம். காங்கிரஸ்-தி.மு.க. இணைந்து தமிழர்கள் படுகொலை செய்ய காரணமாக இருந்தார்கள்.

    அதனால் தமிழர்கள் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு உரிமையை கொடுக்க வேண்டும் என்கிற ஆணையை ராஜபக்சேவிடம் தெரிவித்து தமிழ் இனத்தை காத்தது மத்திய மோடி அரசு தான் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    வங்கிகளில் பணம் இருந்தால் தான் கணக்கு தொடங்க முடியும், ஒருவரின் சாட்சி இருந்தால் தான் கணக்கு தொடங்க முடியும் என்ற நிலையில் இந்திய மக்கள் அனைவருக்கும் நான் தான் சாட்சி, பணம் இன்றி அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று அறிவித்து செயல்படுத்தியர் நமது பிரதமர்.

    இதனால் கடந்த 60 ஆண்டுகளில் இருந்த வங்கிக்கணக்கு 4 கோடி. ஆனால் தற்போது 29 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது என்பதுடன் 12 ரூபாயில் விபத்து காப்பீடு, 40 வயதான இளைஞர்களுக்கு அடல் பொன்சன் திட்டம் என இது போன்ற பல்வேறு திட்டங்கள் கடந்த 3 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசால் செய்யப்பட்டுள்ளது என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.


    1967-ம் ஆண்டு வரையில் பல்வேறு துறைகளில் தமிழர்கள் அதிகாரிகளாக பணியாற்றி வந்தார்கள். ஆனால் இன்று தமிழர்களை தேடிக்கண்டுபிடிக்கும் நிலை உள்ளது. தமிழகத்தில் தற்போது நீட் தேர்வு வேண்டாம் என்று கூறுகிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் நீட் தேர்வு எழுதும் அளவிற்கு எங்கள் தமிழக குழந்தைகள் தகுதி நிறைந்தவர்களாக இல்லை என்று தமிழக முதலமைச்சர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினும் இதை சொல்கிறார். அப்படி என்றால் எங்களுடைய மாணவர்களுக்கு தகுதியில்லை, தமிழகத்திலுள்ள மாணவர்களுக்கு தகுதியில்லை என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. ஏன் அவர்களுக்கு தகுதி இல்லை என்று சொன்னால் தகுதி இழக்க வைக்கப்பட்டன.

    இப்போதுள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் குழந்தைகள் யாராவது அரசு பள்ளியில் பயில்கிறார்கள் என்னுடன் சவால் விட்டு கூறமுடியுமா? இதே போல் காவிரி பிரச்சனையில் தி.மு.க. வழக்கு தொடுத்தது. ஆனால் அந்த வழக்கில் இருந்து காங்கிரசுடன் கூட்டணி வைத்து பின் வாங்கியதன் மூலம் தமிழகத்திற்கு துரோகம் இழைத்தது.

    நாளை கர்நாடகாவில் தேர்தல் நடந்தாலும் பா.ஜ.க. தான் ஆட்சியைப் பிடிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ.க. என்றும் தமிழர்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×