search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னருக்கு ஆதரவான பேச்சு: புதுவை சட்டசபையில் கடும் அமளி- என்.ஆர்.காங். வெளிநடப்பு
    X

    கவர்னருக்கு ஆதரவான பேச்சு: புதுவை சட்டசபையில் கடும் அமளி- என்.ஆர்.காங். வெளிநடப்பு

    சட்டசபையில் கவர்னர் கிரண்பேடிக்கு ஆதரவாக பேசியதால் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் அசோக் ஆனந்து, தன்னை பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்வதாகக் கூறி வெளியேறினார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் அசோக்ஆனந்து எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    புதுவை கவர்னராக பொறுப்பேற்றுள்ள கிரண் பேடி இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி. ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர். கவர்னரின் செயல்பாடுகள் வர வேற்கத்தக்க வகையில் சிறப்பாகவே உள்ளது.

    கவர்னர் எந்த கோப்புகளையும் நிறுத்தவில்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோப்புகளில் உடனடியாக கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார். கவர்னராக பொறுப்பேற்ற பின்னர் புதுவை மாநிலம் தூய்மையானதாக இருந்து வருகிறது.

    இவ்வாறு அசோக்ஆனந்து பேசி கொண்டிருந்தார்.

    கவர்னருக்கு ஆதரவாக பேசியதற்கு ஆளும்கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் கந்தசாமி பேசும்போது,

    கவர்னரை பாராட்டி பேசுவது எந்தவிதத்தில் நியாயம்? தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் வகையில் அவர் செயல்பட்டு வருகிறார் என்றார். உறுப்பினர் லட்சுமி நாராயணன், சட்ட சபைக்கு அதிகாரம் இல்லை என கவர்னர் கூறுகிறார்.

    கோப்புகளை திருப்பி அனுப்புவது தான் தேக்கமில்லாமல் அனுப்புவதா? தியாகிகள் ஓய்வூதிய கோப்புக்கு அனுமதி தரவில்லை. கவர்னர் மனசாட்சியின்றி செயல்படுகிறார் என்றார்.

    அரசு கொறடா அனந்தராமன், என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கவர்னரை விரட்டி அடித்ததை மறந்து விடக்கூடாது. கவர்னரை பாராட்டுவதை சபைக்கு வெளியில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார். அமைச்சர் நமச்சிவாயம் பேசும்போது, என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை கவர்னர்களை அவர்கள் செயல்பட விட்டார்கள்? என்பதை யோசித்து பார்க்க வேண்டும் என்றார். இதேபோல என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் அசோக் ஆனந்து பேச்சுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அன்பழகன் பேசும்போது, கவர்னர் எம்எல்ஏக்களை மதிக்காமல் செயல்படுகிறார். டெல்லி தேர்தலில் மக்களால் அவர் புறக்கணிக்கப்பட்டவர். அவர் எம்.எல்.ஏ.க்களை தரக்குறைவாக பேச என்ன உரிமை உள்ளது? நீங்கள் ஏன் கவர்னரின் ஏஜெண்டாக பேசுகிறீர்கள்? என்றார்.

    ஒரு கட்டத்தில் காங்கிரஸ், அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அசோக் ஆனந்து பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசியதால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.

    அப்போது சபாநாயகர் வைத்திலிங்கம், கவர்னர் கடந்த ஆட்சியில் கடும் நிர்வாக கோளாறு இருந்ததாக கூறியுள்ளார். இதை நீங்கள் ஏற்கிறீர்களா? கவர்னர் பற்றி பேசாமல், அவர் ஆளுமை திறன் பற்றி பேசுங்கள். வேறு எதையும் பேச வேண்டாம் என்றார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமியும் சட்டசபையில் கவர்னரைப்பற்றி எதுவும் பேசக்கூடாது. கவர்னர் உரை பற்றி மட்டும் பேசுங்கள் என்றார்.

    இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் அசோக் ஆனந்து, தன்னை பேச அனுமதிக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறி வெளியேறினார்.

    அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயபால், சந்திர பிரியங்கா ஆகியோரும் வெளியேறினர்.

    Next Story
    ×