search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் ‘திடீர்’ தர்ணா போராட்டம்
    X

    டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் ‘திடீர்’ தர்ணா போராட்டம்

    தேரூர் பகுதியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் ‘திடீர்’ தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    நாகர்கோவில்:

    தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்திருந்த டாஸ்மாக் கடைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்டன. அவ்வாறு குமரி மாவட்டத்தில் அடைக்கப்பட்ட கடைகளில், ஒரு டாஸ்மாக் கடை தேரூர் பகுதியில் உள்ள பாலகிருஷ்ணன்புதூர் மற்றும் உதிரப்பட்டி ஆகிய ஊர்களுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடையை உடனடியாக மூடவும் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பாலகிருஷ்ணன்புதூர், உதிரப்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

    பாலகிருஷ்ணன்புதூர் மற்றும் உதிரப்பட்டி ஆகிய ஊர்களில் சுமார் 100–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தேரூரில் இருந்து எங்களது ஊர்களுக்கு செல்லும் பாதையின் அருகேயுள்ள ஒரு கட்டிடத்தில் கடந்த 4–ந்தேதி ஒரு டாஸ்மாக் கடை செயல்படத் தொடங்கியது. இந்த கடையை அகற்றக்கோரி ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தோம். எங்கள் பகுதியில் போராட்டமும் நடத்தினோம். அதைத்தொடர்ந்து அந்த கடை மூடப்பட்டது.

    ஆனால் 19–ந்தேதி முதல் அந்த டாஸ்மாக் கடை மீண்டும் செயல்பட்டு வருகிறது. எங்கள் ஊர்களில் இருந்து செல்லும் பாதையின் அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் அந்த வழியாக பெண்களும், குழந்தைகளும் செல்ல முடியாத        நிலை ஏற்பட்டுள் ளது. எனவே அந்த கடையை நிரந்தரமாக மூட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டது.

    மனு அளிக்க வந்த பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு வெளியே வந்த பெண்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டுஅங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×