search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்
    X

    தர்மபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்

    தர்மபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் கிரைசாமேரி, அர்ச்சுனன், ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் தர்மபுரி நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து விளக்கி பேசினார்.

    அப்போது நகர்ப்புற பகுதிகளில் ஊரக வேலை உறுதிதிட்டத்தை விரிவுபடுத்த மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன்கடைகளில் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு உள்பட அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தர்மபுரி-மொரப்பூர் ரெயில் பாதை இணைப்பு திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    தர்மபுரி நகரில் ரெயில்பாதை குறுக்கிடும் சாலைகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும். தர்மபுரி பஸ்நிலையத்தில் இலவச கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். செங்கொடிபுரம், நரசய்யர்குளம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதிகளில் நீண்டகாலமாக குடியிருந்து வருபவர்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். டேகிஷ்பேட்டை, பாபா சாகிப் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்.

    அன்னசாகரம் பகுதியில் குடிநீர் பிரச்சினை, கழிவுநீர் கால்வாய் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
    Next Story
    ×