search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசிய காட்சி.
    X
    நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசிய காட்சி.

    மக்களுக்கு நல்லது செய்ய ரஜினி பா.ஜ.க.வுக்கு வரவேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

    மக்களுக்கு நல்லது செய்ய ரஜினிகாந்த் பாரதிய ஜனதாவுக்கு வரவேண்டும் என நெல்லையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் அடங்கிய கோட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நெல்லை வந்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மண்டலமாக சென்று தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பா.ஜனதாவில் பல்வேறு அமைப்பினர் இணைந்து வருகிறார்கள். அந்த அடிப்படையில் ரஜினிகாந்த் பா.ஜனதாவில் இணைய அழைப்பு விடுத்துள்ளோம்.

    எங்கள் கட்சி ஏற்கனவே பலம் பொருந்திய கட்சியாக உள்ளது. இதன் பலத்தை கூட்ட யார் வந்தாலும் வரவேற்போம். ரஜினி வரவேண்டும் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்ததும் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பதட்டம் அடைந்து எதை எதையோ பேசி வருகிறார்கள். ரஜினி வந்தால் பா.ஜனதா மேலும் வளர்ந்து விடும் என பயப்படுகிறார்கள்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை பா.ஜனதா பின்னால் இருந்து இயக்குகிறது என்பதில் உண்மை இல்லை. ஏனென்றால் மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு நிறைவடைந்து பல்வேறு சாதனைகளை நிறைவேற்றியுள்ளது. ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி வந்து ஓராண்டு ஆகியும் சாதனைகள் எதுவும் செய்யப்படவில்லை. மாறாக ஊழல் பெருகிவிட்டது. பஸ் கண்டக்டர் நியமிப்பதில் ஊழல், மணல் குவாரி ஊழல் என ஏராளமான ஊழல் அரங்கேறி வருகிறது.

    இந்த ஆட்சி 5 ஆண்டு நீடிக்க வேண்டும் என்றால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அனைவருக்கும் நல்ல குடிநீர் வழங்க வேண்டும். டாஸ்மாக்கை எதிர்த்து போராடுபவர்களை ஒடுக்குகிறார்கள். ஆளும் கட்சிதான் திறமையில்லை என்றால் எதிர்கட்சியும் திறமையற்றதாக உள்ளது. வருகிற கலைஞர் பிறந்த நாளில் 60-வது ஆண்டு வைர விழா என்று ஊழல் கட்சிகளை ஒருங்கிணைக்கிறார்கள்.

    ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்து ஊழல் கூட்டணியை உருவாக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு அருதி பெரும்பான்மை பலம் பா.ஜனதாவிடம் உள்ளது. எனவே ஊழல் கூட்டணியை கண்டு நாங்கள் பயப்பட தேவையில்லை. காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசு, ரஜினி பா.ஜனதாவில் இணைய கூடாது, தனிக்கட்சி என குரல் கொடுக்கிறார். நீங்கள் குஷ்பு, நக்மாவை வைத்து கட்சி நடத்தும் போது, நாங்கள் ரஜினியை அழைப்பது தவறா? ரஜினி எங்கள் கட்சிக்கு வந்தால் அவரையும், அவரது ரசிகர்களையும் கவுரவிப்போம். இதன் மூலம் மக்களுக்கு நல்லது நடக்கும்.

    தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆண்ட திராவிட ஆட்சியில் ஊழல் அதிகமாகி விட்டது. சர்வ கட்சி கூட்டம் நடத்த ஸ்டாலினுக்கு உரிமை இல்லை. இப்படி இருக்கையில் சர்வ கட்சி கூட்டம் நடத்தி தீர்மானம் கொண்டு சென்றால் பிரதமரை எப்படி சந்திக்க முடியும். ரஜினி அரசியல் சிஸ்டம் கெட்டு போய் உள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் அவர் ஸ்டாலினை நல்ல நிர்வாகி என கூறுவதை எப்படி ஏற்க முடியும்.


    நல்ல நிர்வாகி என்று பிரதமர் மோடியை அவர் குறிப்பிடாதது எங்களுக்கு வருத்தமே. ரஜினியை எதிர்த்து தற்போது பலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது அவசியமில்லாதது. தமிழக அரசு இதை கட்டுப்படுத்த வேண்டும். தற்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் தனி அணியாக உள்ளனர். இவ்வாறு இருந்தால் எப்படி 5 வருடம் ஆட்சியை பூர்த்தி செய்ய முடியும்.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதையை இது காட்டுகிறது. தேர்தல் வருவதை தடுக்க எடப்பாடி தலைமையிலான அரசு நல்ல திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கவில்லை. தமிழக அரசு தான் மத்திய அரசின் பணத்தை சரிவர பயன்படுத்தவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×