search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தம்பிக்காக போலீஸ் தேர்வு எழுதி கைதான ஜெயில் வார்டன் சிறையில் அடைப்பு
    X

    தம்பிக்காக போலீஸ் தேர்வு எழுதி கைதான ஜெயில் வார்டன் சிறையில் அடைப்பு

    தூத்துக்குடியில் தம்பிக்கு உதவுவதற்காக போலீஸ் தேர்வு எழுதிய ஜெயில் வார்டனை போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ், சிறைக்காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. முள்ளக்காட்டில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த வீரபாகு மகன்கள் ராஜா (வயது 25) மற்றும் முருகன் (21) ஆகியோர் ஒரே பெஞ்சில் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது ராஜா, தம்பி முருகனின் வினாத்தாள் மற்றும் விடைத்தாளை பெற்று அதில் விடைகளை பூர்த்தி செய்து கொண்டிருந்தார். இதனை தேர்வு மைய மேற்பார்வையாளர் கண்டுபிடித்தார். இதையடுத்து இருவரும் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராஜா வேலூர் மத்திய ஜெயிலில் கடந்த 4 ஆண்டுகளாக வார்டனாக பணியாற்றி வருவது தெரியவந்தது. முருகனையும் போலீஸ் வேலையில் சேர்க்க முடிவு செய்த அவர், தம்பிக்கு உதவுவதற்காக தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார், மோசடியாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும், ராஜா போலியாக போலீஸ் அடையாள அட்டை வைத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. கைதான இருவரையும் போலீசார் தூத்துக்குடி ஜே.எம்.1-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×