search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    12 நாட்களாக போலீசுக்கு ‘தண்ணி’ காட்டும் நீதிபதி கர்ணன்: மேற்கு வங்கம்-தமிழக போலீஸ் திணறல்
    X

    12 நாட்களாக போலீசுக்கு ‘தண்ணி’ காட்டும் நீதிபதி கர்ணன்: மேற்கு வங்கம்-தமிழக போலீஸ் திணறல்

    தலைமறைவாக இருக்கும் நீதிபதி கர்ணனை பிடிக்க முடியாமல் மேற்கு வங்க தமிழக போலீசார் கடந்த 12 நாட்களாக திணறி வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த கர்ணன், நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறியதை தொடர்ந்து அங்கிருந்து அவர் மாற்றப்பட்டார்.

    கொல்கத்தா நீதிபதியாக நியமிக்கப்பட்ட கர்ணன் அதன் பிறகும் நீதிபதிகள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டே இருந்தார். இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு கர்ணனுக்கு மன நல பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த கர்ணன் மனநல பரிசோதனைக்கு உத்தரவிட்ட 7 நீதிபதிகளுக்கு எதிராகவும் கர்ணன் உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு, நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

    மேற்கு வங்காள டி.ஜி.பி. இந்த உத்தரவை அமல்படுத்தும் விதத்தில் உடனடியாக கர்ணனை கைது செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட்டு, பிறப்பித்த இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



    இதற்கிடையே நீதிபதி கர்ணன் கொல்கத்தாவில் இருந்து சென்னை திரும்பினார். சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் அறை எடுத்து தங்கிய கர்ணனை கைது செய்வதற்காக மேற்கு வங்க டிஜி.பி. ராஜ்கனோஜியா தலைமையில் அம்மாநில போலீசார் சென்னைக்கு விரைந்து வந்தனர். அதற்குள் நீதிபதி கர்ணன் விருந்தினர் இல்லத்தில் இருந்து வெளியேறி விட்டார்.

    அவர் காளஹஸ்திக்கு சென்றிருப்பதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை போலீசையும் துணைக்கு அழைத்துக் கொண்டு மேற்கு வங்காள போலீஸ் படை விரைந்து சென்றது.

    ஆனால் கர்ணன் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியாமல் அவர்கள் சென்னை திரும்பினர். கடந்த 12 நாட்களாக சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் கர்ணனின் செல்போன் நம்பரை வைத்து துப்பு துலக்கப்பட்டது. கடைசியாக அவர் யார் யாரிடம் பேசினார் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.

    ஆனால் கர்ணன் இருக்கும் இடத்தை மட்டும் இதுவரை கண்டு பிடிக்கவே முடியவில்லை. மேற்கு வங்காள மற்றும் தமிழக போலீசார் இதனால் திணறி வருகிறார்கள். இருப்பினும் மனம் தளராமல் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

    கர்ணனை கைது செய்வதற்காக கடந்த 10-ந் தேதி காலையில் சென்னை வந்த மேற்கு வங்காள போலீஸ் அதிகாரிகள் எழும்பூரில் உள்ள ‘ஆபீசர்ஸ் மெஸ்’ விடுதியிலேயே தங்கியுள்ளனர்.

    கர்ணனை பிடிப்பதற்காக பல்வேறு வழிகளிலும் அவர்கள் வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே மேற்கு வங்க டி.ஜி.பி. ராஜ்கனோஜியா, கர்ணனை விரைவில் பிடித்து விடுவோம் என்கிற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    நீதிபதி கர்ணனை இத்தனை நாளுக்குள் கைது செய்துவிடுவோம் என்று கூற முடியாது. அவரை பிடிப்பதற்காக தமிழக போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

    கர்ணன் விவகாரத்தில் உளவு பிரிவு போலீசார் செயல் இழந்து விட்டனர் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2 மாநில போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டிருக்கும் நிலையிலும் நீதிபதி கர்ணன் பிடிபடாமல் போலீசுக்கு தண்ணி காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×