search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் தீபக் குடியேற திட்டமா?
    X

    ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் தீபக் குடியேற திட்டமா?

    போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் வாரிசு என்ற அடிப்படையில் தீபக் குடும்பத்துடன் அங்கு குடியேற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக தீபக் நல்ல நாள் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
    சென்னை:

    ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு அவர் வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா இருந்தார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்புக்கு வந்த பின்னர் சசிகலா ஜெயலலிதா பாணியில் நடைஉடை பாவனைகளை மாற்றினார். ஜெயலலிதா பயன்படுத்திய காரிலேயே பயணம் மேற்கொண்டார் சசிகலா.

    ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோரே அவரது வாரிசு என்று கூறி அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டு முன்பு தினமும் கூடிய தொண்டர்கள் அவரை அரசியலிலும் இழுத்தனர்.

    இதனை தொடர்ந்து தீபா எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். ஆனால் தீபாவின் சகோதரர் தீபக் சசிகலாவுடனேயே இருந்தார்.

    ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கின் போது சசிகலாவுடனேயே இருந்த தீபக், அவரை அத்தை என்றே அழைத்தார்.

    சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக தினகரனை நியமித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தீபக், அ.தி.மு.க.வுக்கு தினகரன் தலைமை ஏற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதாவின் உயில் குறித்த கேள்விக்கு தீபக், பதில் அளித்தார். அப்போது அவர் கூறும்போது, எனது அத்தை ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு நானும் எனது சகோதரி தீபாவுமே வாரிசு என்று கூறி இருந்தார்.

    ஜெயலலிதா எழுதி வைத்திருக்கும் உயிலில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.


    இதற்கிடையே ஜெயலலிதாவின் மறைவு, சசிகலா சிறைவாசம் ஆகியவற்றுக்கு பின்னர், போயஸ் கார்டன் இல்லம் கொஞ்சம் கொஞ்சமாக களை இழக்க தொடங்கியது. ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது, எப்போதும் பரபரப்பாக காணப்பட்ட போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த அறைகள் எல்லாம் தற்போது பூட்டிக் கிடக்கின்றன.

    பணிப்பெண்கள் பலரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். ஒன்றிரண்டு பெண்கள் மட்டுமே ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை பராமரித்து வருகிறார்கள்.

    ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் தீபக்குக்கும், போயஸ் கார்டனில் சசிகலா ஒரு அறையை ஒதுக்கி கொடுத்திருந்தார்.

    தற்போது போயஸ் கார்டன் இல்லம் ஆள்நடமாட்டமே இன்றி வெறிச்சோடி காணப்படும் நிலையில் ஜெயலலிதாவின் வாரிசு என்ற அடிப்படையில் தீபக் குடும்பத்துடன் அங்கு குடியேற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக தீபக் நல்ல நாள் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×