search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் 30-ந்தேதி ஓட்டல்கள் மூடப்படும்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
    X

    தமிழகம் முழுவதும் 30-ந்தேதி ஓட்டல்கள் மூடப்படும்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

    சரக்கு சேவை வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 30-ந்தேதி ஓட்டல்கள் மூடப்படும் என்று உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து இருக்கிறது.
    சென்னை:

    மத்திய அரசின் சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 30-ந்தேதி ஒருநாள் ஓட்டல்கள் மூடப்பட உள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.வெங்கடசுப்பு சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு கீழே வருமானம் வரும் ஓட்டல் கடைகளுக்கு இதுவரை வரி 0.5 சதவீதம் என்றே தீர்மானிக்கப்பட்டு, நடைமுறையில் இருந்து வந்தது. இந்தநிலையில் சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி) 5 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது 10 மடங்கு உயர்வு ஆகும்.

    அதேபோல ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் ஓட்டல்களுக்கான வரி 2 சதவீதமாக இருந்தது. அது தற்போது 6 மடங்கு உயர்ந்து 12 சதவீதமாக தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

    ஏ.சி. வசதி கொண்ட ரெஸ்ட்டாரண்டுகளுக்கு 8 சதவீதமாக இருந்த வரி, தற்போது 18 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. இந்த புதிய வரி உயர்வு வரும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய வரி உயர்வு அமலானால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

    இதுவரை வரியை சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர்களே அரசுக்கு கட்டி வந்தனர். ஆனால் இந்த புதிய வரி உயர்வு காரணமாக இனி பொதுமக்களிடம் கட்டாயமாக வரி வசூலிக்கும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஒரு சிறிய ஏ.சி. ஓட்டலுக்கு ரூ.100-க்கு சாப்பிடும் ஒரு நபர், இனி ரூ.118 வரை கட்டணமாக கொடுக்க வேண்டியது இருக்கும்.



    இதனால் பொதுமக்கள் ஓட்டலுக்கு செல்வதை தவிர்ப்பார்கள். இதன் காரணமாக ஓட்டல் தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்களின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இதனை எதிர்த்து வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் அடைப்பு போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் 1½ லட்சம் உரிமையாளர்கள் பங்கேற்று கடைகளை அடைத்து போராட்டம் நடத்த உள்ளனர்.

    30-ந்தேதி அன்று நடக்கும் போராட்டத்துக்கு மாநிலத்தில் உள்ள பிற ஓட்டல் உரிமையாளர்கள் சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் ஆதரவுகளை பெற இருக்கிறோம். தென் இந்திய மாநிலங்கள் முழுவதும் இதே கோரிக்கையை வலியுறுத்தி அன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

    எங்களது கோரிக்கை ஏ.சி. அல்லாத ரெஸ்ட்டாரெண்டுகளில் ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் 5 சதவீதத்துக்கு மேல் சரக்கு சேவை வரி விதிக்கப்படக்கூடாது, ஏ.சி. ரெஸ்ட்டாரெண்டுகளில் ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் 12 சதவீதத்துக்கு மேல் சரக்கு சேவை வரி விதிக்கப்படக்கூடாது என்பது தான். எங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தரவேண்டும். அறிவிக்கப்பட்டு உள்ள இந்த புதிய வரி உயர்வை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×