search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு - இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வத்துடன் எழுதினர்
    X

    தமிழகம் முழுவதும் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு - இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வத்துடன் எழுதினர்

    போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதை இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வத்துடன் எழுதினர்.
    சென்னை:

    போலீஸ் வேலைக்கு கடந்த 2012-ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சமீபத்தில் போலீஸ் துறைக்கு 13 ஆயிரத்து 137 இரண்டாம் நிலை காவலர்களும், சிறைத்துறைக்கு 1,015 இரண்டாம் நிலை காவலர்களும், தீயணைப்பு துறைக்கு 1,512 வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிட்டது.

    33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் 1 லட்சத்து 30 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். திருநங்கைகளிடம் இருந்தும் விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன. இந்த தேர்வுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 6 லட்சத்து 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பம் அனுப்பியவர்களில் 5 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டன.

    தமிழகம் முழுவதும் இதற்கான எழுத்து தேர்வு 410 மையங்களில் நேற்று நடந்தது. சென்னையில் 56 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வில் 80 மதிப்பெண்களுக்கு 80 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு 80 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன.



    தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் 20 சதவீதம் பேர் வரவில்லை. இளைஞர்களும், இளம்பெண்களும், திருநங்கைகளும், ஆர்வமாக வந்து தேர்வில் கலந்து கொண்டனர். கர்ப்பிணிகளும் தேர்வு எழுதினர். கைக்குழந்தையோடு தேர்வு மையத்துக்கு வந்த பெண்கள் தங்கள் குழந்தைகளை பெற்றோரிடமும், கணவரிடமும் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர்.

    தேர்வு மையத்தில் செல்போன், கைப்பைகள் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. ஹால் டிக்கெட்டும், உரிய அடையாள அட்டையும் கொண்டு சென்றவர்கள் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதியதை வீடியோ படம் எடுத்தனர். மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது.

    சென்னையில் தேர்வு பணியை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். தேர்வு கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டு இருந்த துணை கமிஷனர் ராதிகா தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    தேர்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்த இளம் பெண்களும், இளைஞர்களும் கூறுகையில், “கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தன. உளவியல் சம்பந்தப்பட்ட கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்தது” என்று தெரிவித்தனர்.

    சீருடை தேர்வாணைய அதிகாரிகள் தேர்வு தொடர்பாக கூறுகையில், “தமிழகம் முழுவதும் இருந்து ‘சீல்’ வைக்கப்பட்ட விடைத்தாள்கள் சென்னைக்கு கொண்டுவர குறைந்தது 4 நாட்கள் ஆகும். அதன்பிறகு விடைத்தாள்களை பிரித்து கம்ப்யூட்டர் மூலம் திருத்தும் பணி நடக்கும். எழுத்து தேர்வு முடிவுகள் வெளியாக ஒரு மாதம் ஆகலாம். தேர்வு முடிவு வெளிவந்த பிறகு உடல் தகுதி தேர்வு நடத்தப்படும். எழுத்து தேர்வில் ஒரு பதவிக்கு 5 பேர் வீதம் தேர்வு செய்யப்படுவார்கள்” என்றனர்.

    Next Story
    ×