search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அழிஞ்சிக்குப்பத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய பெண்ணை போலீசார் தாக்கும் காட்சியை படத்தில் காணலாம்.
    X
    அழிஞ்சிக்குப்பத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய பெண்ணை போலீசார் தாக்கும் காட்சியை படத்தில் காணலாம்.

    புதிய மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் போராட்டம் நீடிப்பு- தடியடி

    புதிய மதுக்கடைகள் தங்கள் பகுதிக்குள் திறக்கப்படுவதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. பெண்கள் மறியல், ஆர்ப்பாட்டம் மதுக்கடைகளை சூறையாடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    சென்னை:

    தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் செயல்படும் 3000-க்கும் மேற்பட்ட கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

    நெடுஞ்சாலைகளில் இருந்து சற்று தொலைவிலும் குடியிருப்பு பகுதிகளிலும், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களிலும் திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஏற்கனவே செயல்படும் மதுக்கடைகளால் அதிருப்தியில் இருக்கும் பொதுமக்கள் புதிய மதுக்கடைகள் தங்கள் பகுதிக்குள் திறக்கப்படுவதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது.

    பெண்கள் மறியல், ஆர்ப்பாட்டம் மதுக்கடைகளை சூறையாடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் தாக்குதல் சம்பவமும், போலீஸ் தடியடியும் நடந்து வருகிறது. நேற்றும் பல இடங்களில் மதுக்கடைக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது.

    வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் ஏற்கனவே இயங்கி வந்த டாஸ்மாக் கடை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலும் ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள் 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்றக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் சவமேளத்துடன் வைக்கோலை பிணம் போல செய்து அதனை வண்டியில் வைத்து பாடை கட்டி எடுத்து வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    போராட்டம் காரணமாக 2 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படவில்லை. அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.

    போலீசார் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூடவேண்டும். கடையில் உள்ள மதுபானங்களை அகற்ற வேண்டும் என கூறி ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் டாஸ்மாக் கடையின் சிமெண்டு கூரைகளையும், பெயர் பலகையையும் பிடுங்கி எறிந்தனர்.

    இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்த ஆரம்பித்தனர். நிலைமையை சமாளிக்க முடியாததால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்கினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

    இதனால் மேலும் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் நடுரோட்டில் டயர்களை கொளுத்தி எரித்தனர். அங்கு நிறுத்தி இருந்த தாசில்தாரின் ஜீப் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர்.

    அழிஞ்சிக்குப்பத்தில் டாஸ்மாக் கடையின் முன்பக்க கூரையை பொதுமக்கள் ஆவேசமாக பிரித்து எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    மேலும் த.மா.கா. மாநில இளைஞரணி அமைப்பாளர் பிரேம்காந்தி, ராஜக்கல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் உள்பட 7 பேரை தேடி வருகின்றனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

    இந்த கடையின் முன்பக்க கதவை தாழிட்டு பின்பக்கம் வழியாக ரகசியமாக மது விற்பனை நடைபெறுவதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் மதுக்கடையின் ‌ஷட்டரை அடித்து உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கிருந்த மதுபாட்டில்கள் இருந்த பெட்டிகளை தூக்கி நடுரோட்டில் போட்டு உடைத்தனர். இதில் உடையாத பாட்டில்களை கம்புகளால் அடித்து நொறுக்கினார்கள். மேலும் அருகில் உள்ள பாரில் இருந்த பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

    இதற்கிடையே டாஸ்மாக் கடை பின்புறம் ரகசியமாக மது விற்றதாக அருள், விக்னேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 25 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பழனி அருகே பாப்பம்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.


    டயர்களை கொளுத்தும் போராட்டக்காரர்களை படத்தில் காணலாம்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கையை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் தரையில் உருண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    பின்னர் வருவாய்த்துறை அலுவலர்கள் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த மாத இறுதிக்குள் டாஸ்மாக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். முரட்டுவாய்க்கால் பின்புறத்தில் ஒரு இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்து புதிய மதுக்கடையை திறந்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். டாஸ்மாக் கடையை மூடக்கோரி அவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காஞ்சிகோவிலில் 2 மதுக்கடைகள் செயல்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் மதுக்கடை முன் முற்றுகையிட்டு கடையை திறக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரும் அதிகாரிகளும் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு நடத்தினர்.

    டாஸ்மாக் கடைக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்த பின்னர்தான் இந்த கடையை மூட முடியும். அதற்கான கால அவகாசம் குறித்து சொல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு உடன்படாத பொது மக்கள் நால்ரோடு பகுதியில் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    3 மாத காலத்திற்குள் 2 மதுக்கடைகளையும் வேறு இடங்களுக்கு மாற்றிக் கொள்வதாக உறுதியளிக்கப்பட்டது. இதனால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

    நெல்லை பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் அரசு டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 5 நாட்களாக சுற்று வட்டார கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடையின் எதிரே பந்தல் அமைத்து தினமும் அங்கு சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.

    5-வது நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) தூக்கு மேடை அமைத்து பெண்கள் தங்கள் கழுத்தில் தூக்கு கயிறு கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×