search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் போலீஸ் அதிரடி சோதனை: செல்லாத ரூபாய் நோட்டுகள் 45 கோடி பறிமுதல்
    X

    சென்னையில் போலீஸ் அதிரடி சோதனை: செல்லாத ரூபாய் நோட்டுகள் 45 கோடி பறிமுதல்

    சென்னையில் பா.ஜ.க. பிரமுகரின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்லாத ரூபாய் நோட்டுகள் 45 கோடியை பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னையில் பா.ஜ.க. பிரமுகரின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்லாத ரூபாய் நோட்டுகள் 45 கோடியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பா.ஜ.க. பிரமுகரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். அதற்கு பதிலாக இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டது.

    செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் திருப்பிக் கொடுக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இப்போது இந்த கால அவகாசம் முடிவடைந்துவிட்டதால், பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் கருப்புபணமாக கருதப்பட்டு வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    செல்லாத ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை கையில் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை கோடம்பாக்கம் ஜக்ரியா காலனி 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் செல்லாத ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் கட்டு கட்டாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

    கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் அன்பு ஆகியோர் மேற்பார்வையில் துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் செல்வம் ஆகியோர் தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் குறிப்பிட்ட வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அந்த வீட்டில் தண்டபாணி என்ற பா.ஜ.க. பிரமுகர் வசித்து வருகிறார்.

    அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. வீட்டில் உள்ள ஒரு அறையில் நடத்திய சோதனையில் சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.500, ரூ.1,000 செல்லாத நோட்டுகள் கட்டு கட்டாக சிக்கியது. போலீசார் நேற்று அதிகாலை வரை அந்த பணக்கட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ரூ.50 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் சிக்கியதாக முதலில் தகவல் வெளியானது.

    ஆனால், துணை கமிஷனர் சரவணன் கூறும்போது ரூ.45 கோடி சிக்கியதாக தெரிவித்தார். பணக்கட்டுகள் மிகவும் பாதுகாப்பாக கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    துணை கமிஷனர் சரவணன் நேரடியாக தண்டபாணியிடம் விசாரணை நடத்தினார். செல்லாத ரூபாய் நோட்டுகள் ரூ.45 கோடி எப்படி கிடைத்தது? எதற்காக பதுக்கி வைத்துள்ளர்கள்? என்று விசாரணை நடத்தினார். விசாரணையில் இந்த ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூ.2,000 நோட்டுகளை மாற்றித்தரும் கமிஷன் ஏஜெண்டாக தண்டபாணி செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

    ரூ.45 கோடி பணமும் தேனாம்பேட்டையைச் சேர்ந்த நகை வியாபாரம் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வரும் பதான் சலானிக்கு சொந்தமானது என்றும், அந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாததால் அவற்றை வீட்டில் உள்ள அறையில் பதுக்கி வைத்திருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தண்டபாணி கூறியதாக தெரிகிறது. இதன் மூலம் பதான் சலானியிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ.45 கோடியும் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்படும் என்று துணை கமிஷனர் சரவணன் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பான அடுத்தக்கட்ட விசாரணையை வருமான வரித்துறையினரும், அமலாக்கத்துறையினரும் நடத்துவார்கள் என்றும் சரவணன் குறிப்பிட்டார். தண்டபாணி மீது கைது நடவடிக்கை இருக் காது என்று தெரிகிறது. நேற்று இரவு கோடம்பாக்கம் போலீசார் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 102-ன் கீழ் (சட்டவிரோதமாக பொருட்களை பதுக்கி வைத்தல்) ஒரு வழக்கு பதிவு செய்தனர்.

    சென்னையில் முதல்முறையாக செல்லாத ரூபாய் நோட்டுகள் ரூ.45 கோடி அளவிற்கு சிக்கியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    தண்டபாணி பா.ஜ.க.வை சேர்ந்தவர் இல்லை என்று தமிழக பா.ஜ.க. விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளரும், ஊடக பொறுப்பாளருமான கே.டி.ராகவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. பிரமுகர் தண்டபாணி என்பவரின் வீட்டில் இருந்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரூ.45 கோடி பிடிப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. தண்டபாணி என்ற பெயரில் பா.ஜ.க.வில் பிரமுகர்கள் எவரும், எந்த பொறுப்பிலும் இல்லை.

    இத்தகைய செய்திகள் உள்நோக்கம் கொண்டவையாக உள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த அந்த பிரமுகரை சட்டப்படி விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×