search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் கஞ்சா விற்ற சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
    X

    சென்னையில் கஞ்சா விற்ற சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

    பெண்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை தலைமை செயலக காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர வடிவேல். இவர் அதே பகுதியில் குடிசைகளில் வசிக்கும் பெண்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சரஸ்வதி, புஷ்பா, ஆராயி ஆகிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு தங்களிடம் கஞ்சாவை கொடுத்து விற்பனை செய்ய சொன்னதாகவும் இதற்காக தினமும் ரூ.200 சம்பளம் கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பூக்கடை துணை கமி‌ஷனர் செல்வகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர வடிவேலுவை கையும், களவுமாக பிடிக்க போலீசார் கண்காணித்தனர். அப்போது அவர் ராயபுரம் போலீஸ் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வரவழைத்து அதை தனது வீட்டில் பதுக்கி வைத்து குடிசைப் பகுதி பெண்கள் மூலம் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அவரது வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர வடிவேலு கைது செய்யப்பட்டார். அவர் தற்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சென்னையில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவதை தடுக்க அதை விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரே கஞ்சா விற்பனை செய்த சம்பவம் உயர் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் சுந்தரவடிவேலு மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எனவே சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு விரைவில் சஸ்பெண்டு செய்யப்பட இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×