search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடம்பாக்கத்தில் சோதனை நடந்த பா.ஜனதா பிரமுகர் வீடு.
    X
    கோடம்பாக்கத்தில் சோதனை நடந்த பா.ஜனதா பிரமுகர் வீடு.

    கோடம்பாக்கத்தில் பா.ஜனதா பிரமுகர் வீட்டில் ரூ.45 கோடி பழைய நோட்டுகள் சிக்கியது

    சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பாரதிய ஜனதா பிரமுகர் வீட்டில் ரூ.45 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி திடீரென ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

    அதற்கு பதில் புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன.

    செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் திருப்பி கொடுக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 95 சதவீத பழைய ரூபாய் நோட்டுகள் திருப்பி கொடுக்கப்பட்டன.

    இதற்கிடையே திரும்ப வராத ரூபாய் நோட்டுகள் கருப்புப் பணமாக கருதப்பட்டு, மத்திய வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்து இருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணிசமான அளவுக்கு உயர்த்த மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கை முழுமையான வெற்றியைக் கொடுத்தது. இதன் காரணமாக பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வேறு வழியின்றி அப்படியே பதுக்கி வைத்துள்ளனர். பலர் அவற்றை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்ற முடியுமா என்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கோடம்பாக்கத்தில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் கத்தை, கத்தையாக பழைய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தி.நகர் போலீஸ் துணை கமி‌ஷனர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்ற அவர் மாம்பலம் உதவிக் கமி‌ஷனர் செல்வன் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்தார்.

    அந்த தனிப்படை போலீசார் நேற்றிரவு சுமார் 1 மணிக்கு கோடம்பாக்கம் ஜக்கரியா காலனி, 2-வது தெருவில் உள்ள அந்த குறிப்பிட்ட வீட்டை முற்றுகையிட்டனர். பிறகு கதவைத் தட்டி வீட்டு உரிமையாளரை எழுப்பினார்கள். அந்த வீட்டில் தண்டபாணி என்ற பா.ஜ.க. பிரமுகர் வசித்து வருகிறார்.

    அவர் வீட்டுக்குள் தனிப்படை போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அந்த வீட்டின் ஒவ்வொரு அறையில் இருந்த பொருட்களையும் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு அறையில் இருந்த சாக்கு மூட்டைகள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அந்த சாக்கு மூட்டைகளை போலீசார் அவிழ்த்து பார்த்த போது உள்ளே கத்தை, கத்தையாக பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பழைய ரூ.500 நோட்டுகள் தனியாகவும், பழைய ரூ.1000 நோட்டுகள் தனியாகவும் கட்டு, கட்டுகளாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.


    போலீசார் அந்த பழைய ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் அந்த வீட்டுக்குள்ளேயே வைத்து எண்ணி கணக்கிட்டனர். இன்று அதிகாலையில்தான் பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி முடிந்தது.

    முடிவில் பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.45 கோடி இருப்பது தெரிய வந்தது. அந்த பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ரூ.45 கோடி பழைய நோட்டுகள் எப்படி வந்தது என்று பா.ஜ.க. பிரமுகர் தண்டபாணியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். தண்டபாணி தன் வீடு முன்பே ‘‘ராமலிங்கம் ஸ்டோர்ஸ்’’ என்ற துணி விற்பனை கடையை நடத்தி வருகிறார்.

    அந்த கடையில் போலீஸ் சீருடைகளே அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மூன்று தலை முறைகளாக தண்டபாணி குடும்பத்தினர் இந்த கடையை நடத்தி வருகிறார்கள்.

    துணிக்கடை நடத்தி வரும் அவருக்கு ரூ.45 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் எப்படி வந்தது என்ற சந்தேகம் வலுத்தது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் தண்டபாணியிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது ரூ.45 கோடி பழைய ரூபாய் நோட்டுகள், சென்னையைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர் கொடுத்ததாக தெரிவித்தார். வங்கிகளில் அந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருமாறு கூறி அந்த தொழில் அதிபர் சாக்கு மூட்டைகளில் அந்த பணத்தை தண்டபாணியிடம் கொடுத்ததாக தெரிகிறது.

    ஆனால் தண்டபாணியால் அந்த பழைய ரூபாய் நோட்டுகளை திட்டமிட்டப்படி வங்கிகளில் கொடுத்து மாற்ற இயலவில்லை. எனவே அவர் அந்த பழைய ரூபாய் நோட்டுகளை தமது வீட்டில் பதுக்கி வைத்திருந்தார். இந்த தகவல் எப்படியோ கசிந்து விட்டதால் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

    தண்டபாணி கொடுத்த தகவலை தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த தொழில் அதிபரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். பழைய ரூபாய் நோட்டுகள் அவரதுதான் என்பது உறுதியானால் அந்த தொழில் அதிபரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ.45 கோடி பழைய நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க உள்ளனர். தமிழ்நாட்டில் பழைய ரூபாய் நோட்டுகள் இவ்வளவு அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×