search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி புறப்பட்டபோது எடுத்தபடம்.
    X
    அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி புறப்பட்டபோது எடுத்தபடம்.

    அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி பயணம்

    டெல்லியில் வருகிற 21-ந்தேதி நடைபெறும் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்கவும், மீண்டும் ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தவும் திருச்சியில் இருந்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர்.
    திருச்சி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும்.

    தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.

    மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு நூதன போராட்டங்களை அவர்கள் நடத்தினர். குறிப்பாக எலிக்கறி, பாம்புக்கறி உண்ணுதல், மரத்தில் ஏறி தற்கொலை முயற்சி, மண் சோறு சாப்பிடுதல், சேலை கட்டி போராட்டம், தாலி அறுக்கும் போராட்டம், நிர்வாண போராட்டம் போன்றவற்றை நடத்தினர்.

    தங்கள் கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய இந்த போராட்டம் 41 நாட்கள் நடந்தது.


    அதன் பிறகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தை கைவிடும்படியும் இது குறித்து பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

    அப்போது விவசாயிகள் மே 25-ந்தேதிக்குள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கெடு விதித்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    மே 25-ந்தேதிக்குள் மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் திருச்சியிலிருந்து இன்று அய்யாக்கண்ணு தலைமையில் மீண்டும் போராட்டம் நடத்துவதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். அய்யாக்கண்ணுவுடன் கரூர் கிருஷ்ணப்பா, திருவாரூர் பழனிவேல், கபிஸ்தலம் முருகன், திருவண்ணாமலை தினேஷ், கிருஷ்ணகிரி கிருஷ்ணன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் புறப்பட்டு சென்றனர்.

    இன்று சென்னையில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை முதலில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டிருந்தனர். அவர் ஊட்டி சென்று விட்டதால் தமிழக வேளாண் துறை செயலாளரை சந்தித்து மனு அளிக்கிறார்கள்.

    அதன்பிறகு ஜி.டி. எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள். சனிக்கிழமை டெல்லியை சென்றடையும் தமிழக விவசாயிகள் மறுநாள் (21-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) 28 மாநிலங்களில் உள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசை வலியுறுத்தி மீண்டும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவது. பாராளுமன்ற கூட்ட தொடரின் போது லட்சக்கணக்கான விவசாயிகளை திரட்டி முற்றுகை போராடுவது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

    இதற்காக அனைத்து மாநில விவசாயிகள் சங்கங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
    Next Story
    ×