search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் தூறல் மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்
    X

    சென்னையில் தூறல் மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

    அடுத்த 2 நாட்களுக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப சலனத்தால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை நகரில் ஒருசில பகுதியில் தூறல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் நேற்று மதியம்வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக இரவில் ஆங்காங்கே மழை பெய்தது.

    சென்னையில்  கடல் காற்று வீசாததால் வெயிலின் தாக்கம்  அதிகமாகவே இருந்தது. நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் தூக்கம் இன்றி கடும் அவஸ்தைபட்டனர்.

    இன்று  காலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் வானம்  மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  ஒரு சில  இடங்களில் மழை தூறல்கள் விழுந்தது.

    எழும்பூர்,  சென்ட்ரல், பாரிமுனை, அயனாவரம், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ஆலந்தூர், மயிலாப்பூர்,  பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை,  பகுதியில் தூறல் மழை பெய்தது.

    இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது:-

    தற்போது ஆந்திர பகுதியில் தீவிர வெப்ப நிலை நிலவுகிறது. பல இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலையை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.

    இந்த பகுதியில் இருந்து காற்று தமிழகம் நோக்கி 2 நாட்களாக வீசுவதால் வட தமிழகத்தில் இயல்பை விட அதிகபட்ச வெப்ப நிலை 3  டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகம் பதிவாகி இருந்தது. திருத்தணியில் 45.5 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. இந்த நிலை 2 நாட்களுக்கு தொடரும்

    வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக சூளகிரியில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

    அடுத்த 2 நாட்களுக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப சலனத்தால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை நகரில் ஒருசில பகுதியில் தூறல் மழை பெய்யும்.

    தென்மேற்கு  பருவமழை அந்தமானில் தொடங்கியது. இந்த மாத இறுதியில், அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும்

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×