search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தை சமாளிக்க 620 தனியார் பஸ்கள் சென்னை வந்தன
    X

    போராட்டத்தை சமாளிக்க 620 தனியார் பஸ்கள் சென்னை வந்தன

    அரசு பஸ் ஊழியர் போராட்டத்தை சமாளிக்க வெளியூர்களில் இருந்து 620 தனியார் பஸ்கள் சென்னைக்கு வந்தன.
    சென்னை:

    அரசு பஸ் டிரைவர்கள்- கண்டக்டர்கள் போராட்டம் காரணமாக சென்னையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அலுவலகங்களுக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்தும் பஸ்கள் வராமல் ஆட்டோவில் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

    மொத்தம் உள்ள 3300 பஸ்களுக்கு பதிலாக 500 பஸ்களே இயக்கப்படுகிறது. முக்கிய வழித்தடங்களில் மட்டும் அந்த பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் மற்ற வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் எங்கும் செல்ல முடியாமல் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களை நம்பி இருக்கிறார்கள். பஸ்கள் ஓடாததால் ஆட்டோ-கார்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    போராட்டத்தை சமாளிக்க சென்னை மாநகரில் தனியார் பஸ்கள், மினி பஸ்கள் இயக்க அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து வெளியூர்களில் இருந்து 620 தனியார் பஸ்கள், மினி பஸ்கள் சென்னை வந்தன.



    அவை இன்று காலை முதல் கோயம்பேட்டில் இருந்து பிராட்வே, திருவான்மியூர், தாம்பரம், செங்குன்றம், ஆவடி, திருமழிசை உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சென்று வருகின்றன. அவற்றில் தூரத்துக்கு ஏற்ப ரூ.5, ரூ.10, ரூ.15, ரூ.20 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    வெளியூர் பஸ் ஊழியர்களுக்கு கட்டண நிர்ணயம் சரியாக தெரிவிக்காததால் சில வழித்தடங்களில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். தனியார் பஸ்களில் எந்தெந்த பகுதிக்கு செல்லும் என்ற போர்டும் வைக்கப்பட்டு இருந்தது.

    கோயம்பேடு, பிராட்வே உள்பட முக்கிய பஸ் நிலையங்களில் தனியார் பஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்கள், புறப்படும் நேரம் போன்றவை ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
    Next Story
    ×