search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலுவைத்தொகை ரூ.362 கோடி வழங்கினால் தான் கிருஷ்ணா நீரை திறப்போம்: தமிழக அரசிடம் ஆந்திர அதிகாரிகள் உறுதி
    X

    நிலுவைத்தொகை ரூ.362 கோடி வழங்கினால் தான் கிருஷ்ணா நீரை திறப்போம்: தமிழக அரசிடம் ஆந்திர அதிகாரிகள் உறுதி

    நிலுவைத்தொகை ரூ.362 கோடியை வழங்கினால் தான் ஜூலை மாதம் கிருஷ்ணா நீர் திறக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் தமிழக அரசிடம் உறுதியாக கூறியுள்ளனர்.
    சென்னை:

    சென்னை மாநகரின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதில் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா நதிநீர் பெரும் பங்கு வகிக்கிறது. கிருஷ்ணா நதிநீரை பெற தமிழக, ஆந்திர அரசுகள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

    இந்த நீர் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையை அடையும் 406 கி.மீ. தூரம் உள்ள சாய் கங்கை கால்வாயின் பராமரிப்பு மற்றும் மேம்பாடு பணிகளுக்கான நிதியை ஆந்திராவும், தமிழக அரசும் பகிர்ந்துகொள்ள வேண்டும். தமிழக அரசு வழங்க வேண்டிய பராமரிப்பு செலவு ரூ.362 கோடி நிலுவையில் உள்ளது.



    சென்னை மாநகரில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, கடந்த ஜனவரி மாதம் அப்போதைய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர், ஆந்திர மாநிலம் சென்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினர். அப்போது, தமிழக அரசின் நிலுவைத்தொகையை பொங்கல் பண்டிகைக்கு பின் தருவதாக கூறியிருந்தனர்.

    ஆனால், அதன் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் தமிழக அரசு அதிகாரிகள் ஆந்திரா செல்லவில்லை. இதனால் ஆந்திர மாநில தலைமை செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் 15 பேர் கொண்ட அதிகாரிகள் குழு தமிழகம் வந்தது. அவர்கள் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் தமிழக அரசு வழங்க வேண்டிய ரூ.362 கோடி நிலுவைத்தொகை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

    பேச்சுவார்த்தையின்போது, ஆந்திர அரசுக்கு கொடுக்கவேண்டிய நிலுவைத்தொகை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி உரிய பதில் அளிப்பதாக கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்தார். ஆனால் நிலுவைத்தொகையை வழங்கினால் மட்டுமே ஜூலை மாதம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக கூறிச்சென்றனர்.
    Next Story
    ×