search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்டையாக மாறிய பூண்டி ஏரி: 50 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் உள்ளது
    X

    குட்டையாக மாறிய பூண்டி ஏரி: 50 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் உள்ளது

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி தற்போது 50 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பதால் குட்டை போல் காட்சியளிக்கிறது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இங்கு மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா தண்ணீர் சேமித்து வைக்கப்படும். இங்கிருந்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 8 டி.எம்.சியும், ஜூலை முதல் அக்டோபர் வரை 4 டி.எம்.சியும் தண்ணீர் வழங்க வேண்டும்.

    அதன் படி கடந்த ஜனவரி 9-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆந்திராவில் வறட்சி நிலவியதால் கண்டலேறு அணை வற்றியது.

    இதன் காரணமாக மார்ச் 22-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஜனவரி 21 முதல் மார்ச் 22-ந் தேதி வரை 2.253 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

    கோடை வெயில் மற்றும் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் வரத்து நின்று போனதால் பூண்டி ஏரியில் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதன் எதிரொலியாக பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஏப்ரல் 6-ந் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி வெறும் 50 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் ஏரி குட்டை போல் காட்சியளிக்கிறது.

    தற்போது ஏரியில் இருப்பு உள்ள தண்ணீர் 10 கனஅடி வீதம் பேபி கால்வாய் மூலம் சென்னை மெட்ரோவாட்டர் போர்டுக்கு திறந்து விடப்படுகிறது.
    Next Story
    ×