search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் தமிழகத்தின் முதல் பொறியியல் பட்டதாரியாக உருவெடுத்த திருநங்கை கிரேஸ் பானு
    X

    பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் தமிழகத்தின் முதல் பொறியியல் பட்டதாரியாக உருவெடுத்த திருநங்கை கிரேஸ் பானு

    உலக மக்களில் மூன்றாம் பாலினத்தவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் போராட்டத்தில் வெற்றிபெற்ற தமிழகத்தை சேர்ந்த கிரேஸ் பானு ஒரு திருநங்கை என்ற முறையில் இந்த மாநிலத்தின் முதல் பொறியியல் பட்டதாரி என்ற பெருமைக்குரிய சிறப்பிடத்தையும் பிடித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்திலுள்ள திருநங்கையர்களுக்கு முழுமையான சமூக பாதுகாப்பை அளிப்பதற்கு தேவையான திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்காக கடந்த 5-04-2008 அன்று அந்நாள் தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியால் திருநங்கையர்கள் நல வாரியம் 15-04.2008 அன்று ஏற்படுத்தப்பட்டது. ஆரம்பக்கட்டமாக இதன் செயல்பாட்டுக்காக ஒரு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

    திருநங்கையர்களை சிறப்பிக்கும் வகையில், இந்த ஆணை வெளியிடப்பட்ட ஏப்ரல் மாதம் 15 ஆம் நாளை திருநங்கையர் நாள் என அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரவாணிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையினை பரிசீலனை செய்து, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் ஆம் நாள் திருநங்கையர் தினம் ஆக கடைப்பிடிக்கப்படும் என கருணாநிதி உத்தரவிட்டார்.

    அதன்பின்னர், திருநங்கையர் சமூகத்தினரை நாட்டின் மூன்றாம் பாலினத்தவராக அங்கீகரித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. கடந்த 15-4-2014 அன்று இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கே.எஸ். ராதா கிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியவாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதி மத்திய - மாநில அரசுகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் திருநங்கையர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஒரு ஆணின் உடலுக்குள் அடைப்பட்டு கிடக்க ஆன்மா மறுதலிக்கும்போது, ஆண் என்ற அடையாளத்தை உதறித்தள்ளி பெண்மைக்குரிய மெல்லியல்புகளை சுவைப்பதற்காகவும் ஒரு தாயாகவும், சகோதரியாகவும், தோழியாகவும் தனது மென்மையான அன்பினை பிறருக்கு பரிமாறவும் முடிவெடுத்து உடல் மாற்றங்களுக்கு ஏற்ப உருவ மாற்றத்தையும் உருவத்திற்கேற்ற உடை மாற்றத்தையும் விரும்பும் இந்த சிறுபிரிவினரை இந்த சமூகம் எப்படி அடையாளம் காண்கிறது? எத்தகைய வரவேற்பை நல்குகிறது? என்பது எல்லாம் நாம் கண்கூடாக கண்டும், அறிந்தும் வரும் உண்மைகள் ஆகும். 

    இவ்வகையில், அதிக சவால்கள், அடிப்படை உரிமைகளை பெற பல்வேறு போராட்டங்களை சந்தித்து கொண்டு, சக மனித சமூகம் இவர்களுக்கு இழைக்கும் இன்னல்களை கடந்து தன் சமூகம் உயிர்த்தெழுந்து, சராசரி மனிதர்களுக்கான அங்கீகாரத்தை பெறுவதற்காக வானொலியே அரிதான கண்டுபிடிப்பாக அறியப்பட்ட காலத்தில் இருந்து இந்த சமூகத்தினர் பேஸ்புக், ட்விட்டர் காலம் வரை தொடர்ந்து போராடி வருகின்றனர்.



    இவ்வாறு, ஒவ்வொரு நொடியையும் போராட்டக்களமாக அனுபவித்து வாழும் இந்த சிறிய பிரிவினரை சேர்ந்தவர்களில் ஒருவர், கிரேஸ் பானு. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கிரேஸ் பானு, தனது அடையாளத்தை வெளிப்படுத்திய கனமே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 

    ஆண்கள் உயர்நிலை பள்ளியில் உயர்கல்வி படிப்பை முடித்த நிலையில் உறவினர், நண்பர்களின் ஆதரவு பறிக்கப்பட்ட சூழலில் தன் உயிரை மாய்த்துக் கொள்ளவும் முடிவு செய்தார். தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சி தோல்வியை தழுவியதும் மனநல காப்பகத்தில் அடைக்கப்பட்டார். 

    உடல் தொடர்பான மாற்றங்களை வெளிப்படுத்த தொடங்கியதால் மன நோயாளி பட்டம் சூட்டப்பட்ட தனது வனவாச காலம் முடிந்த பின்னர், தனது உடல் மற்றும் மனமாற்றத்துக்கு ஏற்றதொரு சமூகத்திலேயே தொடர்ந்து வாழ நினைத்ததால் மனநல காப்பகத்தில் இருந்து வெளியே வந்த கிரேஸ் பானு, தமிழகத்தில் இயங்கி வரும் ஒரு திருநங்கை சபையில் தஞ்சம் புகுந்தார். 

    இழந்ததாய் நினைத்த வாழ்க்கையை மீண்டும் தன் சமூகத்தாருடன் துவங்கிய கிரேஸ் பானு, அந்த சமூகத்தவரில் தன்னை பெற்ற “மகளாக” ஏற்றுகொண்ட ஒரு மூத்த திருநங்கையின் உதவியோடு டிப்ளோமா படிப்பில் 94 சதவிகித மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றார்.

    டிப்ளோமா முடித்த கையோடு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்த பானுவின் அடையாளம் அலுவலகத்தில் தெரிந்துப்போக, சகப் பணியாளர்களின் ஏளனப் பார்வைக்கும், தீப்பொறி பேச்சுக்கும் தொடர்ந்து இலக்காகி வந்த பானு, ஒரு காலக்கட்டத்தில் அந்த வேலையை இழக்கும் சூழலும் ஏற்பட்டது.

    பலரிடம் கடன்பெற்று உடல் மாற்றங்களுக்கான அறுவை சிகிச்சை செய்தும் வேலையை பெற முடியாததால், தொடர்ந்து கல்வியில் கவனம் செலுத்தும் நோக்கில் பொறியியல் பட்டதாரியாகும் கனவுடன், பல்வேறு போராட்டங்களை கடந்து, சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்விக்கான கலந்தாய்வில் தன் சமூகத்தை முன்னிலைப்படுத்திய முதல் திருநங்கை என்ற பெருமிதத்தோடு கிரேஸ் பானு கலந்து கொண்டார். 

    இதற்கிடையில், எதிர்கால வாழ்க்கை எனும் இலட்சிய கனவுடன் சமகாலத்தில் தனது இனத்தை சேர்ந்த திருநங்கையர்களுக்கு இழைக்கப்பட்ட பல்வேறு சமூக கொடுமைகளை எதிர்த்தும் இவர் தொடர்ந்து குரல் கொடுத்தும், போராடியும் வந்துள்ளார். 



    போலீசாரால் திருநங்கையர்கள் தகாத முறையில் நடத்தப்படும் வேளைகளிலும் உலகின் கவனத்தை தமிழகத்தின் பக்கம் ஈர்த்த ஜல்லிக்கட்டு போராட்டம், நியூட்ரினோ திட்டம் எதிர்ப்பு போராட்டம், கருவேலங்காடுகளை அழிக்கும் போராட்டம் என சமீபகாலமாக தமிழ் நாளேடுகளில் இடம்பிடித்த பல்வேறு போராட்டங்களில் இவரது போர்க்குரல் அதிகமாக எதிரொலித்து வந்துள்ளது. 

    குறிப்பாக, தமிழக அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி திருநங்கையர்களுக்கான இட ஒதுக்கீட்டினை கல்வி மற்றும் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தவும் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருகே கிரேஸ் பானு பங்கேற்ற போராட்டமும், இவர் மீது நடத்தப்பட்ட போலீசாரின் அடக்குமுறையும் பலரது கவனத்தை ஈர்த்தது. 

    டிப்ளோமா படிப்பில் 94 சதவிகித மதிப்பெண் பெற்றிருந்தபோதும் அரசு கல்லூரியில் இடம் கிடைக்காமல் அரக்கோணத்தில் இயங்கி வரும் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மின்சாரம் மற்றும் மின்னணு துறையில் படிக்க கிரேஸ் பானுவுக்கு இடம் கிடைத்தது. 

    கல்லூரி நிர்வாகம் கிரேஸ் பானுவிற்கு இலவச கல்வி வழங்கிய போதும், தனது அடிப்படை தேவைகளுக்கான செலவினங்கள், தேர்வு கட்டணம் உள்ளிட்டவற்றை சமாளிக்க போதுமான அளவுக்கு பணம் கிடைக்காமல் பரிதவித்தார்.

    இவரது வாழ்க்கைப் போராட்டம் மற்றும் சமூகப் போராட்டத்துக்கு ஆதரவாக திருநங்கை இனத்தவர் மட்டுமின்றி, பல நண்பர்களும், தோழியர்களும் தோள் கொடுத்து வந்துள்ளனர். 

    குறிப்பாக, பேஸ்புக்,ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இவர் இடும் பதிவுகள் உரிய முறையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பேஸ்புக்கில் இவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.



    இவ்வாறு, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் துவங்கிய போராட்டம், தொடர்ந்து நீடித்தாலும், ஒருசில உதவிப்படிகளை உறுதியாய் பிடித்தபடி, நன்றாக படித்து முடித்த திருநங்கை கிரேஸ் பானு தமிழகத்தின் முதல் பொறியியல் பட்டதாரியாக தற்போது உருவெடுத்துள்ளார். 

    இந்த அசுர சாதனையை மகிழ்ச்சியுடன் நேற்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிரேஸ் பானு, இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மன நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். 

    தனது முகநூல் பிதிவில் கிரேஸ் பானு கூறியிருப்பதாவது..,

    பல்வேறு இன்னல்கள், போராட்டங்கள், கசப்பான அனுபவங்கள், வாழ்க்கை பற்றிய புரிதல், புதுப்புது அனுபவங்கள் மத்தியிலே என் படிப்பு இன்றுடன் முடிவடைந்தது. என்னை படிக்க அனுமதித்த அண்ணா பல்கலைக்கழகத்த்கிற்கும் எனக்கு கல்லூரியில் அனுமதி வழங்கிய அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரி தாளாளர் ,மேலாளர், நிவாகிகள் அனைவருக்கும் என் நன்றிகள்.

    மேலும் மூன்று வருடங்கள் எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்த என் துறைத்தலைவருக்கும், துறைசார்ந்த பேராசியர்களுக்கும், என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

    நான் சோர்வுற்றிருந்த நேரங்களில் என்னை மழலையாக மாற்றி எனக்கு பிரச்சனைகளை எதிர்கொள்ள ஊக்கமூட்டிய என் மீது மிகுந்த அக்கறை கொண்ட என் அன்புத்தோழிகள் மற்றும் என்னுடன் பயின்ற அத்துணை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் .

    மேலும் என் கல்விக்கு உதவிய அத்துணை நல்லுள்ளங்களுக்கும் சோதனைகளை சாதனையாக்க வேண்டும் என என்னை ஊக்கப்படுத்திய அத்துணை நண்பர்களுக்கும் உயிருள்ளவரை நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு நல்ல தோழியாக பல ஆலோசனைகளை வழங்கிய என் கல்லூரி நூலக ஆசிரியைக்கு நன்றிகள் பல.

    எனக்கு மாபெரும் முதுகெலும்பாக இருந்து என் செயல்களை ஊக்குவித்த என் ஆருயிர் தோழி ப்ரித்திகா யாஷினிக்கும், எனக்கு தாயைபோல அன்பு ஊட்டிய லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கும்,என் மீது அக்கறை செலுத்தி என்னை அரவணைத்த என் தோழி ஏஞ்சல் கிளாடிக்கும் என் அன்புகலந்த நன்றிகள்.

    என் கல்லூரி வாழ்க்கை எதிர்பார்க்க முடியாத போராடி கிடைத்த ஒரு பரிசு. நான் கடந்து வந்த பாதையை என்னும் போது மனம் வலிக்கிறது. இருப்பினும் என் சமூகத்தின் விடுதலைக்கான விதையை இட்டுச் செல்கிறேன் என்ற நம்பிக்கையில் கடந்து செல்கிறேன்.

    சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர். முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும் என சட்டமேதை பாபா சாகேப் டாக்டர். அம்பேத்கர் வலியுறுத்திய வாழ்க்கை சித்தாந்தத்தை ஓரளவுக்காவது நிறைவேற்றியுள்ளேன் என்ற பெருமிதத்துடன் விடை பெறுகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    வாழ்க்கையில் எந்த நிரந்தரமும், உத்திரவாதமும் இல்லாதவர்களால் தங்களது உறவுகளை பிறருக்கு துணிச்சலாக அடையாளம் காட்ட முடிகிறது.

    ஆனால், சமூகத்தில் அங்கீகாரம்பெற்ற அங்கத்தினரான ஒருசிலரால் மட்டும் ஆணோ, பெண்ணோ, திருநங்கையோ.., மனிதரை மனிதராக மதிக்கத் தெரியாமல் போவது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை விடை காண இயலவில்லை.



    காட்டில் வாழும் ஐந்தறிவு படைத்த கொடிய மிருகங்கள் கூட தங்களின் இனத்தை சேர்ந்த இதர மிருகங்களை காயப்படுத்தவோ, ஒதுக்கி வைக்கவோ விரும்புவதில்லை.

    ஆனால், ஆறறிவு கொண்ட மனிதர்கள் என்று தற்பெருமை பேசி வரும் மனித குலத்தை சேர்ந்த நாம் மட்டும் தான் நம்மில் ஒருபிரிவினரை குறைந்தபட்சம் நூறு அடையாள பெயர்களால் அழைத்து, தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரையும் குத்தி மனித சமுதாயத்தை விட்டு காலகாலமாக விலக்கியே வைத்துள்ளோம்.

    பூர்வஜென்ம விதிப்பலனாகவும், ‘க்ரோமோசோம்’களின் குளறுபடியினால் விளைந்த (எதிர்) வினைப்பயனாகவும் மூன்றாம் பாலின மனிதப்பிறவிகளாக இந்த பூமியில் பிறந்து விட்ட திருநங்கையர்கள், உலகம் முழுவதும் மக்களால் புறக்கணிக்கப்படுவதுடன், அற்பப் புழுக்களாகவும் நடத்தப்பட்டு வருகின்றனர்.

    தாங்கள் செய்தறியாத தவறுக்கு தேவையற்ற தண்டனையை அனுபவித்து வரும் திருநங்கையர்கள், காலகாலமாக அடைந்து வரும் வேதனையும், அனுபவித்து வரும் இன்னல்களும் சொல்லில் அடங்காத-சொன்னால் விளங்காத-சொல்லி, விளங்கிய பின்னரும், யாராலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத துயரத் தொடர்கதையாக இன்னும்கூட தொடரத்தான் வேண்டுமா..? என்ற கேள்விக்கு இன்னும் ஆயிரக்கணக்கான யாஷினி பிரியதர்ஷினியும், கிரேஸ் பானுவும் உருவாக வேண்டும்.

    இந்த செயற்கரிய சாதனையை படைத்துள்ள திருநங்கை கிரேஸ் பானு தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுதராணமாக ஆற்றியுள்ள அர்ப்பணிப்பை நாமும் வாழ்த்தலாம்!

    புகைப்படம்: கிரேஸ் பானு, அனு பட்நாயக்
    Next Story
    ×