search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளஸ்-2 உயிரியல் தேர்வில் தவறான கேள்வி: மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
    X

    பிளஸ்-2 உயிரியல் தேர்வில் தவறான கேள்வி: மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

    பிளஸ்-2 உயிரியல் தேர்வில் தவறான விடைகளுடன் கேட்கப்பட்ட கேள்விக்கு அனைத்து மாணவர்களுக்கும் ஒரு மதிப்பெண் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த மாணவி வர்ஷினிதேவி சார்பில் அவரது தாயார் கீதா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எனது மகள் பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார். எனது மகளை மருத்துவராக்க வேண்டும் என்பது தான் எனது லட்சியம். கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி உயிரியல் தேர்வு நடந்தது. அந்த தேர்வில், பிறந்த குழந்தையின் உடல் எடையில் எத்தனை சதவீதம் தண்ணீர் இருக்கும் என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 85 முதல் 90 சதவீதம் என்பது தான் அதற்கான சரியான விடை ஆகும். ஆனால் கேள்வித்தாளில் அந்த விடையே இல்லை. அதற்குப்பதிலாக 80 முதல் 90 சதவீதம், 55 முதல் 60 சதவீதம், 71 முதல் 78 சதவீதம், 80 முதல் 95 சதவீதம் என தவறான விடைகளே தரப்பட்டு இருந்தது.

    தேர்வுக்குப்பிறகு மதிப்பீட்டாளர்கள் வெளியிட்ட சரியான விடையில், மாணவர்கள் 85 முதல் 90 சதவீதம் என்ற சரியான விடைக்கு பதிலாக கேள்வித்தாளில் தரப்பட்டுள்ள நான்கு விடைகளில் ஒன்றான 80 முதல் 90 சதவீதம் என்பதை தேர்வு செய்து எழுதியிருந்தாலே ஒரு மதிப்பெண் தரப்படும் எனக்கூறி உள்ளனர்.

    மிகச்சரியாக படித்துவிட்டு தேர்வு எழுதிய எனது மகளுக்கு புத்தகத்தில் உள்ள சரியான விடையை கேள்வித்தாளில் தராமல் கேள்வித்தாளை தயாரித்தவர்கள் குளறுபடி செய்துள்ளனர். தவறான விடைகளைக் கொடுத்துள்ளதால் அந்த கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    விடைத்தாளை தயாரித்த ஆசிரியர்கள் குழு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘அந்த கேள்விக்கான பதிலாக கேள்வித்தாளில் உள்ள 80 முதல் 90 சதவீதம் என்பதை குறிப்பிட்டு இருந்தாலோ அல்லது கேள்வித்தாளில் இல்லாத மிகச்சரியான விடையான 85 முதல் 90 சதவீதம் என்பதைக் குறிப்பிட்டு இருந்தாலோ அவர்களுக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும். ஆனால் இந்த 2 விடைகளையும் எழுதாமல், தவறாக குறிப்பிட்டு இருந்தால் அவர்களுக்கு மதிப்பெண் வழங்க இயலாது’ என தெரிவித்துள்ளனர். இதை ஏற்க முடியாது.

    கேள்விக்கு சரியான விடை கேள்வித்தாளில் இல்லை. கேள்வித்தாளை தயாரிக்கும் குழு கவனமுடன் செயல்பட வேண்டும். எனவே, தவறான விடைகள் தரப்பட்டுள்ள இந்த கேள்விக்கு அனைத்து மாணவர்களுக்கும் தலா ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். ஒருவேளை மதிப்பீடு செய்யும் பணி முடிந்து இருந்தால் இந்த ஒரு மதிப்பெண்ணை கூடுதலாக சேர்க்க வேண்டும். பள்ளித்தேர்வுகள் துறை இயக்குனர் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×