search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வறட்சியால் விவசாயிகள் மரணம்: உண்மை நிலையை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
    X

    வறட்சியால் விவசாயிகள் மரணம்: உண்மை நிலையை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

    இறந்துபோன விவசாயிகளைப் பற்றிய உண்மைநிலையை தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடன் வாங்கி செய்த விவசாயம் பொய்த்துப்போனதால் கடனைக் கட்ட வழியற்று நிற்கிற விவசாயி, தன் மானத்தை இழந்துவிடக்கூடாது என்பதால் உயிரையே இழக்கத் துணிகிறான். மானத்திற்காக மரணத்தையே சந்திக்கத் தயாராகும் அத்தகைய விவசாயப் பெருங்குடி மக்களின் மரணத்தை எள்ளிநகையாடுவதும், இழிவுபடுத்துவதுமான செயல்களை ஆட்சியாளர்கள் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்கள்.

    ‘விவசாயிகள் ஏழைகள் இல்லை; அவர்கள் வட்டிக்குப் பணம்விட்டு சம்பாதிக்கிறார்கள்’ எனவும், ‘விவசாயிகள் ஒருவரும் சாகவில்லை; இறந்தால் தமக்குதான் தெரிந்திருக்குமே’ எனவும் திருவாய் மலர்ந்தருளிய திருவாளர்கள் எல்லாம் அமைச்சரவையை இன்றைக்கும் அலங்கரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது வேளாண் பெருங்குடி மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்தத் தமிழர்களின் உணர்வுகளையுமே சீண்டுவதாகவும், காயப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. எனவே, வறட்சியினால் விவசாயிகள் இறக்கவில்லை எனத் தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் பிரமாணப்பத்திரத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, இறந்துபோன விவசாயிகளைப் பற்றிய உண்மைநிலையை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் எனவும், இறந்து போன விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×