search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் தடுப்பு உடைந்ததால் தாமிரபரணி ஆற்றில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகுந்த கடல் நீர்
    X

    மணல் தடுப்பு உடைந்ததால் தாமிரபரணி ஆற்றில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகுந்த கடல் நீர்

    மணல் தடுப்பு உடைந்ததால் தாமிரபரணி ஆற்றில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் புகுந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ஆறுமுகநேரி:

    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வளம் சேர்க்கும் தாமிரபரணி ஆறு, ஆத்தூரை அடுத்த புன்னக்காயல் அருகே கடலில் சங்கமிக்கிறது. ஆத்தூர் பகுதியில் எக்காலத்திலும் நிறைந்த தண்ணீருடன் தான் ஒரு ஜீவநதி என்பதை நிரூபித்து வந்த தாமிரபரணிக்கு இந்த ஆண்டு சோதனையும், வேதனையும் ஆகிப்போனது. பருவமழை அடியோடு பொய்த்துப் போனதால், கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே ஆறு வறண்டு மைதானம் போல மாறிவிட்டது.

    ஆத்தூர், உமரிக்காடு பகுதிகளை சேர்ந்த மக்கள் தாங்கள் குளிப்பதற்காக ஆற்றுக்குள் ஆங்காங்கே ஊற்று தோண்டி கிணறுகளைப்போல அமைத்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் மணல் தடுப்பு உடைந்ததால் இங்கு நேற்று கடல் நீர் புகுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலையில் இருந்தே ஆற்றுக்குள் அடியெடுத்து வைக்கத் தொடங்கிய கடல் நீர் மாலையில் மிகுந்த வேகத்துடன் சுனாமியைப் போல பாய்ந்து ஆற்றை ஆக்கிரமித்துவிட்டது. கடலில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள வாழவல்லான் தடுப்பணை வரைக்கும் ஆற்றுக்குள் கடல் நீர் நிரம்பியது.

    இதனால் ஆத்தூர் சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர் உப்பாக மாறும் அவல நிலை உள்ளது. ஆற்றங்கரைகளில் ஊற்று தோண்டி மோட்டார் மூலம் விவசாயத்தை காப்பாற்ற தண்ணீர் எடுத்து வந்த நிலைக்கும் இப்போது ஆபத்து வந்துவிட்டது. இதனிடையே மணல் தடுப்பை மீண்டும் அமைப்பதற்கான அவசர ஆய்வை தொடங்கியுள்ளனர். அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ஏற்கனவே தற்போது உடைந்த மணல் தடுப்பு பகுதியின் அருகில் புதிய தடுப்பணை அமைக்கும் பணியை அரசு தொடங்கியது. ஆனால் அதனை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று கூறி மக்கள் கடந்த வாரம் மறியல் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆகவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் உள்ளது.
    Next Story
    ×