search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி அணி பிரமாண பத்திரம்: அ.தி.மு.க. அணிகள் இணைப்பில் சிக்கல்
    X

    சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி அணி பிரமாண பத்திரம்: அ.தி.மு.க. அணிகள் இணைப்பில் சிக்கல்

    சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அணியினர் மாவட்ட செயலாளர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதனால் இரு அணிகள் பேச்சுவார்த்தை மங்கி வருகிறது.
    சென்னை:

    தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு செயல்படுகிறது.

    சசிகலாவின் தலைமையை ஏற்க பிடிக்காமல் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி செயல்படுகிறது. 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் மெஜாரிட்டியை நிரூபித்த சசிகலாவின் ஆதரவு அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியை நடத்தி வருகிறது.

    இரு அணிகளும் பிரிந்து தனித்தனியாக செயல்படுவதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. கட்சி பெயரையும் பயன்படுத்த கூடாது என்பதால் அ.தி.மு.க. அம்மா அணி என்றும் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

    ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருந்தாலும் வருமான வரித்துறையின் அதிரடி சோதனை, தேர்தல் கமி‌ஷனுக்கு டி.டி.வி. தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சி போன்ற பல்வேறு சிக்கல்களை அ.தி.மு.க. அம்மா அணியினர் அடுத்தடுத்து சந்தித்தனர்.

    இதற்கிடையில் இரு அணிகளையும் ஒன்று சேர்க்கும் முயற்சி கடந்த 20 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    இதற்காக இரு அணியிலும் பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டன. சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு பரிந்துரைக்க வேண்டும் என்ற 2 முக்கிய நிபந்தனைகளை ஓ.பி.எஸ். தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    இந்த நிபந்தனைகளை ஏற்று செயல்படுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

    இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் கட்சியில் இருந்து தான் ஒதுங்கி கொள்வதாக அறிவித்தார். இதையடுத்து இரு அணிகளும் பேச்சு வார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குழுவில் உள்ள நிர்வாகிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்துக்களை கூறியதால் பேச்சு வார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டது.

    இதற்கிடையில் ஓ.பி.எஸ். அணியின் கோரிக்கையை ஏற்கும் வகையில் தலைமைக் கழகத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன.

    இதையடுத்து பேச்சுவார்த்தை உடனே நடைபெற்று சுமூக தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடைபெறவில்லை.

    இரு அணிகளுக்கு இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதில் பேசப்பட்ட விவகாரங்களில் ஒரு சிலவற்றை இரு அணியும் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

    இதனால் இரு அணிகளும் இணைவது உறுதியானது. ஆட்சி, கட்சியை வழிநடத்த குழு ஒன்றும் அமைப்பது எனவும் அதற்கு ஓ.பி.எஸ். தலைவராக இருப்பார் எனவும் பேசப்பட்டது. முதல்வராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பார் எனவும் பேசி முடிவு செய்ததாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 3 நாட்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்களுக்கு பிரமாண பத்திரம் வழங்கப்பட்டன. அவற்றை பொதுக்குழு, செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற்று ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

    அந்த பிரமாண பத்திர படிவத்தில் சசிகலாவை பொதுச்செயலாளராகவும், டி.டி.வி.தினகரனை துணைப் பொதுச்செயலாளராகவும், சட்டபேரவை கட்சி தலைவர் மற்றும் தலைமை நிலைய செயலாளராக எடப்பாடி பழனிசாமியையும் முழு மனதாக ஆதரிப்போம் என்று உறுதியளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


    இதை அறிந்த ஓ.பி.எஸ். அணியினர் அதிர்ச்சி அடைந்தனர். சசிகலா குடும்பத்தை ஒட்டு மொத்தமாக கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என ஓ.பி.எஸ். அணியினர் கூறி வரும் நிலையில் இந்த பிரமாண பத்திர விவகாரம் பேச்சுவார்த்தையில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    கட்சியில் இருந்து டி.டி.வி. தினகரன் ஒதுங்கி இருப்பதாக கூறியதும், சசிகலா பேனர் அகற்றப்பட்டதும் அரங்கேற்றப்பட்ட நாடகம் என்று ஓ.பி.எஸ். தரப்பில் கூறுகின்றனர்.

    இரு அணிகள் இடையே வெளிப்படையான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றாலும் மறைமுகமாக சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டு அவற்றை ஏற்றுக் கொண்ட நிலையில் திடீரென சசிகலா பிரமாண பத்திர விவகாரம் பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டையை போட்டுள்ளது.

    இத்தகைய சூழ்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுகுறித்து ஓ.பி.எஸ். அணியின் செய்தி தொடர்பாளர் அஸ்பயர் சுவாமி நாதன் கூறுகையில், ஒரு புறம் பேச்சுவார்த்தை என்று கூறி விட்டு மறுபுறம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெற்று வருகிறார்கள். இது எந்த வகையில் நியாயம். எங்கள் நிபந்தனையை ஏற்று செயல்படுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தையை தொடங்க முடியும் என்றார்.

    இதைத் தொடர்ந்து இரு அணிகள் பேச்சுவார்த்தை மங்கி வருகிறது.
    Next Story
    ×