search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்ற 2 விவசாயிகள் மின்சாரம் தாக்கி பலி
    X

    தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்ற 2 விவசாயிகள் மின்சாரம் தாக்கி பலி

    விழுப்புரம் அருகே தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்ற 2 விவசாயிகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரத்தை அடுத்துள்ள மரகதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 40). விவசாயி. இவருக்கு சொந்தமாக கண்டபாக்கம்- கண்டிய மடை பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    இவர் அதில் நெல், கரும்பு, மரவள்ளி கிழங்கு போன்ற பயிர்களை பயிரிட்டிருந்தார். அவரது தோட்டத்தில் காட்டுபன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்து செல்வதையும் வழக்கமாக கொண்டிருந்தது. இதனால் குமாருக்கு விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க வரும் காட்டுப்பன்றிகளை மின்சாரம் தாக்கி கொல்ல வேண்டும் என்று நினைத்தார்.

    எனவே தனது விவசாய நிலத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மின்சாரம் இணைப்பு கொடுத்திருந்தார். இதனால் காட்டுபன்றிகள் வயலுக்குள் நுழைவதை தடுக்கலாம் என்று இந்தசெயலில் ஈடுபட்டார்.

    இந்தநிலையில் கண்டபாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயிகளான வேலாயுதம்(வயது 65) மற்றும் மகாதேவன்(42) ஆகியோர் நேற்று இரவு தங்களது விவசாய நிலத்தில் வேலையை முடித்து விட்டு குளிப்பதற்காக குமாரின் தோட்டத்துக்கு சென்றனர்.

    அங்கு தண்ணீர் தொட்டியில் மின்சாரம் பாய்ச்சியிருப்பது தெரியாமல் அவர்கள் குளிக்க முயன்றனர். இதில் வேலாயுதம், மகாதேவன் ஆகிய 2 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியசீலன், மருது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வேலாயுதம், மகாதேவன் ஆகிய 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விவசாயி குமாரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×