search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மின் வாரியத்துக்கு அன்புமணி ராமதாஸ் யோசனை
    X

    தமிழகத்தில் மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மின் வாரியத்துக்கு அன்புமணி ராமதாஸ் யோசனை

    நியாயமான விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்து தமிழகத்தில் நிலவும் மின் தடையை போக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோடை வெயிலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்தடையை போக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகிவிட்டதாகக் கூறி இரு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது மின்தட்டுப்பாடு நிலவுவதற்கு தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியம் தான் காரணமாகும். வல்லூர் அனல் மின் நிலையத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.1,156 கோடியை தமிழக அரசு செலுத்தாததால், தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த 1,065 மெகாவாட் மின்சாரத்தை நிறுத்திவிட்டது. சென்னையில் பல இடங்களில் மின்சாரம் தடைபடுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

    வல்லூர் அனல் மின்நிலைய நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி மின்சாரத்தை வாங்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, “வல்லூர் மின்சாரம் தேவையில்லை, தனியார் மின்சாரம் குறைந்த விலையில் கிடைப்பதால் அதையும், காற்றாலை மின்சாரத்தையும் வாங்கி நிலைமையை சமாளிப்போம்” என்று மின்வாரிய அதிகாரிகள் வீரவசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது அறிவார்ந்த செயலல்ல.

    எனவே, வல்லூர் அனல் மின்நிலையம் உள்பட எங்கெல்லாம் மின்சாரம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் நியாயமான விலையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்து தமிழ்நாட்டில் நிலவும் மின் தடையை போக்க தமிழ்நாடு மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×