search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
    X

    மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

    தமிழக அரசின் இ-சேவை மையத்தின் சேவையைப் பெறுவதற்கு இனி செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக அரசின் இ-சேவை மையத்தின் சேவையைப் பெறுவதற்கு இனி செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின் கீழ், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு குழுக்கள் ஆகியவற்றின் மூலமாக தற்பொழுது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு இ-சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. மக்களுக்கு அரசின் சேவைகளை விரைவாகவும் வெளிப்படையாகவும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே அளிப்பது இதன் நோக்கம் ஆகும்.

    இச்சேவை மையங்கள் மூலம், வருமானச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், இருப் பிடச் சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரிச் சான்றிதழ், முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மூவலூர் ராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம் ஆகிய மின் ஆளுமை அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.

    மேலும், இந்த சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரியை செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சேவை மையங்கள் வாயிலாக சேவைகளை மக்களுக்கு விரைவாக வழங்குவதற்கு வசதியாக அரசால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக அனைத்து இ-சேவை மையங்களிலும் 2-5-17 முதல் கைபேசி (செல்போன்) எண் கட்டாயமாக்கப்படுகின்றது. முதன் முறையாக இ-சேவை மையத்திற்கு செல்பவர்கள், தங்களது கைபேசி எண்-ஐ கணினி பொறுப்பாளர்களிடம் கொடுத்து, பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்த பின் தங்களது கைபேசிக்கு தாங்கள் விண்ணப்பித்த சேவைக்கான விண்ணப்ப எண் மற்றும் சேவைக் கட்டணம் குறித்த விவரங்கள் குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப் படும்.

    விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிந்து கொள்ள 155250 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்படும் சந்தேகங்கள் மற்றும் விவரங்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு (1800 425 1333) தொடர்பு கொண்டு தீர்வு பெற்று கொள்ளலாம்.

    விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு, சான்றிதழ் தயாரானதும், பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அந்த குறுஞ்செய்தி மூலமாக, இணையம் வழியாக மக்கள் தங்களது சான்றிதழ்களைப் பார்வையிட இயலும். எனவே, பொதுமக்கள் 2-5-17 முதல் இ-சேவை மையங்களுக்கு செல்லும் பொழுது தவறாமல் தங்களது கைபேசி எண்-ஐ பதிவு செய்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×