search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய மதுபான கடைகளை திறந்தால் சமூக சீரழிவை ஏற்படுத்தும்: மார்க். கம்யூனிஸ்டு
    X

    புதிய மதுபான கடைகளை திறந்தால் சமூக சீரழிவை ஏற்படுத்தும்: மார்க். கம்யூனிஸ்டு

    புதிய, புதிய மதுபான விற்பனை கூடங்களை அரசு ஏற்படுத்துவது சமூக சீரழிவையும், சமூக பதட்டத்தையும் ஏற்படுத்தும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு புகார் அளித்துள்ளது.
    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுவினால் ஏற்படக் கூடிய தீங்குகளை உணர்ந்து உச்ச நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த முடிவை வரவேற்று அமுலாக்க வேண்டிய புதுவை அரசு குறுக்கு வழியை கையாண்டு தேசிய நெடுஞ்சாலைகள் என்று பெயரிடப்பட்டுள்ள சாலைகளை மாநில சாலைகளாக பெயர் மாற்றம் செய்யும் மிக மோசமான காரியத்தில் புதுவை காங்கிரஸ் அரசு ஈடுபட்டு வருவதை மார்க்சிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    மதுபான விற்பனையை ஊக்குவித்து மக்களின் வருமானத்தை சுரண்டக் கூடிய வகையில் அரசின் செயல்பாடு அமைந்துள்ளது. பல கிராங்களில் மக்கள் குடியிருக்கும் மைய பகுதியில் புதிய மதுபானக் கடைகள் மிக வேகமாக தொடங்குவதற்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு வசதியாக மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்ற அனுமதிகள் விரைவாக வழங்கப்பட்டுள்ளது.

    மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதிகளில் இதுபோன்று மக்கள் குடியிருப்பு பகுதியில் மதுபான கடைகள் ஆரம்பிப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    மக்களின் எதிர்ப்பை மீறி சில கடைகள் செயல்படுத்தபட்டும் உள்ளது. குறிப்பாக ஆண்டியார்பாளையம் கிராமத்தின் மக்கள் இதனை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், மக்களிடம் வாங்கும் சக்தியை உருவாக்குவதற்குமான நடவடிக்கைகளை எடுக்காமல் புதிய, புதிய மதுபான விற்பனை கூடங்களை அரசு ஏற்படுத்துவது சமூக சீரழிவையும், சமூக பதட்டத்தையும் ஏற்படுத்தும்.

    மதுபழக்கத்தில் இருந்து மக்களை படிப்படியாக மீட்டெடுப்பதற்கான காரியங்களில் அரசு ஈடுபட வேண்டுமே தவிர, வருமானத்தை பெருக்க கூடிய ஒருவழியாக மாற்ற வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    Next Story
    ×