search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.1 கோடி கேட்டு பெரம்பூர் தொழில் அதிபர் கடத்தல்
    X

    ரூ.1 கோடி கேட்டு பெரம்பூர் தொழில் அதிபர் கடத்தல்

    ரூ.1 கோடி கேட்டு பெரம்பூர் தொழில் அதிபரை கடத்திய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த கடத்தல் வழக்கில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது குறித்து போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.
    பெரம்பூர்:

    பெரம்பூர், பேப்பர்மில்ஸ் ரோடு பிரகாஷ் அவன்யூவில் வசித்து வருபவர் கணேசன். தொழில் அதிபர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் வீட்டில் இருந்து காரில் வெளியே சென்றார். அப்போது மர்ம கும்பல் அவரை காருடன் கடத்தி சென்று விட்டனர்.

    பின்னர் கணேசனிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டினர். அவ்வளவு பணம் இல்லை என்று அவர் கூறினார். இதையடுத்து ரூ.10 லட்சத்தை ஒரு வாரத்தில் கொடுக்க வேண்டும். போலீசில் புகார் செய்யக் கூடாது. பணம் கொடுக்கும் இடத்தை பின்னர் கூறுவதாக கடத்தல் கும்பல் தெரிவித்தனர்.

    மேலும் கணேசனிடம் இருந்து கார் மற்றும் ரூ.10 ஆயிரம், செல்போனை பறித்து அவரை இறக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து கணேசன் செம்பியம் போலீசில் புகார் செய்தார். உதவி கமி‌ஷனர் ஜான்ஜோசப், இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் கடத்தல் கும்பலை ‘பொறி’ வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

    விசாரணையில் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று கே.கே.நகரை சேர்ந்த முத்துப்பாண்டி, திருவொற்றியூரை சேர்ந்த பூமிநாதன் ஆகியோரை கைது செய்தனர்.

    கணேசனை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்து உள்ளனர். இந்த கடத்தல் வழக்கில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    கைதானவர்களிடம் இருந்து கார், ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கணேசனிடம் இருந்து பறித்த செல்போனை பயன்படுத்தி வந்து உள்ளனர். இதனை வைத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விட்டனர்.

    பெரம்பூரில் தொழில் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×