search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்கக்கோரி கணவர், மனைவி தீக்குளிக்க முயற்சி
    X

    நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்கக்கோரி கணவர், மனைவி தீக்குளிக்க முயற்சி

    நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கணவர், மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

    இந்நிலையில் கண்டாச்சிபுரம் அருகே சத்தியகண்டனூர் கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் (வயது 72), இவருடைய மனைவி நவநீதம் (62) ஆகியோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள், திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து திறந்து தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து, பாண்டுரங்கனையும், நவநீதத்தையும் தடுத்து நிறுத்தி அவர்கள் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள்.
    நிலம் ஆக்கிரமிப்பு

    போலீசார் நடத்திய விசாரணையின்போது பாண்டுரங்கன் கூறுகையில், கடந்த 1977–ம் ஆண்டு சத்தியகண்டனூர் கிராமத்தில் ராமு என்பவரிடம் இருந்து 1 ஏக்கர் 29 சென்ட் நிலம் வாங்கினேன். இந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி பலமுறை தாலுகா அலுவலகத்தில் முறையிட்டுடேன். ஆனால் வாங்கவில்லை.

    இந்த நிலையில் கடந்த 2012–ம் ஆண்டு என்னுடைய நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுபற்றி புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்க இல்லை. எனவே என்னுடைய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது நிலத்தை மீட்டு பட்டா வழங்க வேண்டும் என்றார்.
    பரபரப்பு

    இதை கேட்ட போலீசார், இதுகுறித்து கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று பாண்டுரங்கனையும், நவநீதத்தையும் எச்சரித்து அங்கிருந்து போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×