search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் வெற்றி: 63 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை
    X

    தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் வெற்றி: 63 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை

    தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று எதிர்க்கட்சிகள் சார்பில் நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. மறியலில் ஈடுபட்ட 63 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
    சென்னை:

    விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 40 நாட்களுக்கும் மேலாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தபோதிலும், மத்திய அரசு போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை.

    இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இம்மாதம் 16-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருந்தார். அந்தக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.  தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட தி.மு.க. கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றன. அ.தி.மு.க-., பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

    அதே நேரத்தில், வணிகர்கள் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், சினிமா தொழிலாளர்கள் சங்கம், அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.


    இதனால், தலைநகர் சென்னை முழுவதும் காலை முதலே பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சென்னையில் முக்கிய வியாபார தலங்களான தியாகராயநகர், பாரிமுனை, மைலாப்பூர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

    இதேபோல், ஆசியாவிலேயே பெரிய காய்கறி சந்தையான சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டும் அடைக்கப்பட்டது. அதே நேரத்தில், அங்குள்ள பூ மற்றும் பழ மார்க்கெட்டுகள் திறந்திருந்தன. இருந்தாலும், பொதுமக்களின் வருகை குறைவாகவே இருந்தது. மார்க்கெட் வளாகமும் வெறிச்சோடி கிடந்தது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான நகரங்களில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன.

    அதேசமயம், நகரங்களில் பஸ், ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. பல இடங்களில் ஆட்டோக்களும் ஓடவில்லை. இதன் காரணமாக, முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பெட்ரோல் பங்குகள் இயங்கினாலும், அதில் பணிபுரிந்த ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

    முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தனியார் அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கின. அரசு ஊழியர்களில் ஒரு பகுதியினர் போராட்டத்தில் குதித்துள்ளதால், அரசு அலுவலங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. மொத்தத்தில், ஆளுங்கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பங்களிப்பு இல்லாமல், விவசாயிகள் பிரச்சினைக்காக நடத்தப்பட்ட இந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.


    தமிழகம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட 63,086 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையை பொறுத்தவரை, 41 இடங்களில் நடைபெற்ற சாலை மறியலில் 8,300 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், ஒரு எம்.பி., 13 எம்.எல்.ஏ.க்களும் அடங்குவார்கள். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இன்று மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    Next Story
    ×