search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடைகள் அடைப்பு
    X

    சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடைகள் அடைப்பு

    விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன.
    சேலம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய பயிர்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் 40 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிற் சங்கத்தினர் வணிகர் சங்கங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.

    இதையொட்டி சேலம் மாநகரில் செவ்வாய்பேட்டை, பழைய பஸ்நிலையம், புதிய பஸ் நிலையம், கடைவீதி, அக்ரஹாரம், அம்மாபேட்டை, ஸ்வர்ணபுரி, ஜங்சன், 5 ரோடு, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, கன்னங்குறிச்சி, குரங்கு சாவடி உள்பட அனைத்து பகுதிகளிலும் வணிக நிறுவனங்கள், நகைகடைகள், ஜவுளி கடைகள், மளிகை, காய்கறி மற்றும் டீ கடைகள், தியேட்டர்கள், கறிக்கடைகள்ளும் அடைக்கப்பட்டிருந்தன.

    செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட், வ.உ.சி. மார்க்கெட், லீ பஜாரிலும் கடைகள் அடைக்கப்பட்டதால் ஆள் நடமாட்டமின்றி சந்தைகள் வெறிச்சோடி காணப்பட்டன.உழவர் சந்தைகள் திறந்திருந்தாலும் காய்கறிகள் அதிகம் வரவில்லை. கடைகள் அடைக்கப்பட்டதால் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

    அரசு, தனியார் பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. பஸ்களில் பெரும்பாலான சீட்கள் காலியாக இருந்தது. மாநகரில் உள்ள 2 பஸ் நிலையத்திற்கும் குறைந்த அளவே பயணிகள் வந்து சென்றதால் மாநகரில் உள்ள முக்கிய சாலைகள் வெறிச்சோடியே காணப்பட்டன.ஒரு சில ஆட்டோக்கள் மட்டும் இயங்கின.

    பந்த் போராட்டத்தை யொட்டி விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மா பேட்டை உழவர் சந்தை முன்பு விவாசயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல சேலம் புறநகரில் எடப்பாடி, சங்ககிரி, கொங்கணாபுரம், மேட்டூர், ஓமலூர், மேச்சேரி, வழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, தலைவாசல், அயோத்தியாப்பட்டினம் உள்பட அனைத்து பகுதிகளிலும் வணிக நிறுவனங்கள், நகை கடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

    அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல இயங்கின. பஸ்களில் பயணிகள் கூட்டம் மிக குறைவாக இருந்தது. அனைத்து நகரங்களும் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஏற்காட்டில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கிராமப்புறங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன இயக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.

    இது குறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மளிகை மற்றும் காய்கறி கடைகள், டீ கடைகள் உள்பட அனைத்து கடைகளையும் விவசாயிகளுக்கு ஆதரவாக அடைக்கப்பட்டுள்ளன. பிற்பகல் 3 மணிக்கு பிறகு கடைகள் வழக்கம் போல கடைகள் திறக்கப்படும் என்றனர்.

    தர்மபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்குகின்றன. ஆட்டோக்களும் ஓடுகின்றன. ஆனால் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்களிலும் மிக்குறைவான பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர்.

    ஆறுமுக ஆசாரிதெரு, சின்னசாமிநாயுடுதெரு, பென்னாகரம் ரோடு, முகம்மது அலி கிளப் ரோடு, பைபாஸ் ரோடு, நேதாஜி பைபாஸ் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெரும்பாலானகடைகள் அடைக்கப்பட்டிருந்தன. டீக்கடைகள், பெட்டிக் கடைகள் உள்ளிட்ட ஒருசில கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. லாரிகளும் வழக்கம்போல் ஓடின.

    அரூர் பஸ் நிலையம், கடைவீதி, பெரியார்நகர், திரு.வி.க.நகர், வர்ணதீர்த்தம், பாட்சாபேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஓட்டல்கள், மளிகை கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.

    அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினி பஸ்கள் இயங்கின. ஆனால் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

    அரூரில் இருந்து தீர்த்தமலை செல்லும் சாலையில் முத்தானூர் என்ற பகுதியில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு கும்பல் ரோட்டில் கற்களை அடுக்கி வைத்து விட்டு சென்று விட்டது. இதனால் அந்தவழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து அந்த கற்களை அகற்றினார்கள். அதன் பிறகு வாகனங்கள் ஓடத்தொடங்கின.

    தற்போது முத்தானூர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த கற்களை வைத்து விட்டு சென்ற மர்ம கும்பல் யார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    காரிமங்கலத்திலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ், லாரி, ஆட்டோக்கள் ஓடின. பெங்களூரு ரோடு, சென்னைரோடு, சப்ஜெயில் ரோடு, காந்திரோடு பகுதிகளில் ஒருசில கடைகள் மட்டும் திறந்திருந்தன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    மாவட்டம் முழுவதும் மொத்தம் 423 பஸ்கள் உள்ளன. இதில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 223 பஸ்கள் இயக்கப்பட்டன.

    தி.மு.க., மற்றும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்க டிரைவர்கள், கண்டக்டர்கள் இன்று அரசு பஸ்களை இயக்கவில்லை. லாரிகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடுகின்றன.

    ஓசூரில் அனைத்து கடைளும் இன்று மூடப்பட்டு இருந்தன. உழவர் சந்தையும் இயங்கவில்லை. இதனால் ஓசூர் எம்.ஜி.ரோடு, பழைய பெங்களூரு சாலை, நேதாஜிரோடு, தாலுகா அலுவலகம் ரோடு வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் பஸ்கள் வழக்கம்போல் ஓடின. லாரிகள், ஆட்டோக்கள் குறைந்த அளவே ஓடியது.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வழக்கம்போல் கர்நாடக பஸ்கள் ஓசூர் வந்து சென்றன.

    ஊத்தங்கரை, மத்தூர், காரப்பட்டு ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. பஸ்கள், வழக்கம்போல் ஓடியது.

    போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று கடைகள் அனைத்து அடைக்கப்பட்டு இருந்தன.

    தேன்கனிக்கோட்டையில் உள்ள காந்திரோடு, நேதாஜி ரோடு, நேருதெரு, பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    இதேபோல் ராயக் கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் டீக்கடை, மளிகைக்கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

    நாமக்கல்லில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்நிலையம், அண்ணாசிலை, சேலம் ரோடு, வேலூர் ரோடு, திருச்செங்கோடு ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பஸ் நிலையம், கடைவீதி, மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் ஒருசில கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. அந்த கடைகளை அடைக்கும்படி வியாபாரிகளிடம் தி.மு.க. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கட்சி தொண்டர்கள் நேரில் சென்று கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர்களும் கடைகளை அடைத்தனர்.

    அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. ஆட்டோக்களும் ஓடுகின்றன. நாமக்கல்லில் பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தன.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ (நீட்) நுழைவுத் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்று இந்த பயிற்சிக்கு பெரும்பாலான மாணவ, மாணவிகள் செல்லவில்லை. இதனால் சில பள்ளிகளில் இந்த பயிற்சி வகுப்பு ரத்து செய்யப்படட்டது.

    பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், பரமத்தி, கந்தம்பாளையம், வேலகவுண்டன்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    நகர பகுதிகளில் இருந்து கிராம பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்கள் இயங்கவில்லை. அரசு பஸ்கள் இயங்கினாலும் பயணிகள் கூட்டம் இல்லை. கரூர் - நாமக்கல் பை-பாஸ் ரோட்டில் முக்கிய இடங்களிலும், சுங்கச்சாவடியிலும் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.

    திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம், பழைய பஸ்நிலையம், சேலம் ரோடு, நாமக்கல் ரோடு, ஈரோடு ரோடு, வேலூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டல்கள், மளிகை கடைகள், வர்த்தன நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன.

    பஸ் நிலையம் அருகே ஜவுளிக்கடைகளும் மூடப்பட்டு இருந்தன. ஒருசில டீக்கடைளம், பெட்டிக் கடைகளும் திறந்து இருந்தன.

    சேந்தமங்கலம், காளப்ப நாயக்கன்பட்டி, காரவள்ளி, புதன்சந்தை, புதுச்சத்திரம், பேளூக்குறிச்சி ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    Next Story
    ×