search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ்களை மறித்து போராட்டம்: துரைமுருகன்-எ.வ.வேலு கைது
    X

    பஸ்களை மறித்து போராட்டம்: துரைமுருகன்-எ.வ.வேலு கைது

    விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கக் கோரி, கோ‌ஷம் எழுப்பி பஸ்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட எ.வ.வேலு மற்றும் துரைமுருகன் உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் அண்ணா சாலையில் உள்ள தி.மு.க. அலுவலகம் அருகே இன்று காலை கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் எம்.பி. முகம்மது சகி உள்பட தி.மு.க.வினர், காங்கிரஸ், முஸ்லீக் லீக், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற அரசு டவுன் பஸ்கள் மற்றும் ஆரணி, திருவண்ணாமலைக்கு சென்ற பஸ்களை மறித்து பயணிகளை கீழே இறக்கி விட்டனர். பிறகு, பஸ்களை காலியாக இயக்க அனுமதித்தனர். பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகள் நடந்தே சென்றனர்.

    டவுன் டி.எஸ்.பி. ஆரோக்யம் தலைமையில் இன்ஸ்பெக்டர் அறிவழகன், ஆயுதப்படை மற்றும் அதி விரைவுப்படை போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டிருந்தும் பயனில்லை. பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் அமைதி காத்தனர்.

    இதையடுத்து பயணிகள் பாதுகாப்பு கருதி போக்குவரத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அண்ணாசாலையில் தி.மு.க. அலுவலகம் வரை பஸ்கள், ஆட்டோ, கார்கள் உள்பட வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

    மாற்றாக, பழைய பஸ் நிலையத்தில் இருந்து வடக்கு போலீஸ் நிலையம், புதிய மீன் மார்க்கெட் வழியாக கோட்டை சுற்றுச் சாலையை சுற்றிச் சென்று பெரியார் பூங்கா அருகே உட்புற சாலையில் பஸ்கள் அண்ணாசாலைக்கு திருப்பி விடப்பட்டது.

    போராட்டம், போக்குவரத்து மாற்றம் காரணமாக அனைத்து தனியார் பஸ்களும் உடனடியாக நிறுத்தப்பட்டது. கார்கள், ஆட்டோக்கள் பழைய மீன் மார்க்கெட், லாங்கு பஜார், கமி‌ஷனரி பஜார் வழியாக தெற்கு போலீஸ் நிலையம் அருகே போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.


    இதையடுத்து,அங்கு வந்த தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க.வினர் மற்றும் தோழமை கட்சியினர் போராட்டம் செய்தனர்.பிறகு ஊர்வலமாக சென்ற துரைமுருகன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், முஸ்லீக் லீக், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்க விடாமல் மறித்தனர்.

    மேலும் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கக் கோரி, கோ‌ஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் செய்த எ.வ.வேலு உள்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    வேட்டவலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. முன்னாள் அமைச்சரான கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் ஆராஞ்சி ஆறுமுகம், அன்புமணி உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
    Next Story
    ×